இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் மற்றும் அவர்களின் படகுகளையும் மீட்பதற்கு இலங்கை அரசை, மத்திய அரசு வற்புறுத்த வேண்டும். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நிரந்தர தீர்வு காண்பதற்காக மனப்பூர்வமாக நடவடிக்கைகளை எடுக்க மத்திய வெளியுறவுத்துறைக்கு நீங்கள் அவசர உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமென, பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தொடர்ந்து பல முறை கடிதம் எழுதியுள்ளார். இவற்றின் விளைவாக, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீராவுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீராவுடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ். (File Photo)
அதில் இலங்கை சிறைகளில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிப்பது பற்றி தாங்கள் பரிசீலிக்க வேண்டும். அதுபோல், இந்திய சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிப்பது பற்றி நாங்கள் பரிசீலிப்போம்.
படகுகளும், மீன்பிடி சாதனங்களும் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு முக்கியமானவை என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், அவை வெயிலிலும், மழையிலும் தொடர்ந்து கிடந்தால், பயனின்றி போய்விடும். அத்துடன், இருநாட்டு கடல்சார் சுற்றுச்சூழலையும் சிதைத்து விடும். எனவே, எனது 2 யோசனைகளையும் தாங்கள் ஆக்கப்பூர்வமாக பரிசீலிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திரமோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா 06.07.2016 அன்று எழுதிய கடிதம், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இலங்கை கடற்படையினரால் அப்பாவி தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட இருவேறு சம்பவங்களை உங்கள் கவனத்துக்கு இந்த கடிதம் மூலம் கொண்டுவர விரும்புகிறேன். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மீன்பிடி தளத்தில் இருந்து பாரம்பரிய மீன்பிடி படகில் மீன் பிடிப்பதற்காக சென்ற ஆறு மீனவர்கள் 4-ந் தேதி அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை கல்பிடியா என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மற்றொரு சம்பவத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து 2 மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 17 மீனவர்களும் 5-ந் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை கங்கேசன்துறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பாக் நீரிணைப் பாரம்பரிய பகுதியில் மீன்பிடிக்கும் வரலாற்றுப்பூர்வமான உரிமைகள், தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து இலங்கை அரசால் மறுக்கப்பட்டு வருகின்றன.
இந்திய அரசியல் சாசனத்துக்கு விரோதமாக 1974, 1976-ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா கொடுத்திருப்பதுதான் இந்த பிரச்சினைக்கு மூலகாரணமாக இருந்து கொண்டிருக்கிறது.
இந்த ஒப்பந்தங்களை சட்டப்பூர்வமாக எதிர்த்து, தனிப்பட்ட முறையில் நான் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு தன்னையும் இணைத்துள்ளது. கோர்ட்டில் இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், இலங்கையுடனான சர்வதேச கடல் எல்லை என்பது முடிந்துபோன விஷயமாக கருதப்படமுடியாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடாகும். கச்சத்தீவை மீட்பது மூலமாகத்தான், வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலை பாக் நீரிணைப் பகுதியில் தமிழக மீனவர்கள் அமைதியாக மேற்கொள்ளமுடியும்.
ஏழை மீனவர்களின் ஒரே வாழ்வாதாரமாக இருக்கும் அவர்களின் மீன்பிடி படகை, எந்த பராமரிப்பும், உபயோகிப்பும் இல்லாமல் அப்படியே நீண்ட காலமாக கடலில் விட்டு வைத்திருப்பதால், அவை கடுமையாக பழுதாகிவிடும்.
தற்போது கைதான 23 மீனவர்கள் மற்றும் அவர்களின் 3 படகுகளையும் சேர்த்து, இலங்கையில் அடைக்கப்பட்டுள்ள 57 மீனவர்களையும், 98 படகுகளையும் மீட்பதற்கு இலங்கை அரசை மத்திய அரசு வற்புறுத்தவேண்டும். எங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நிரந்தர தீர்வு காண்பதற்காக மனப்பூர்வமாக நடவடிக்கைகளை எடுக்க மத்திய வெளியுறவுத்துறைக்கு நீங்கள் அவசர உத்தரவுகளைப் பிறப்பிக்கவேண்டும். இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
