இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 35 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்: பிரதமருக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம்!

tncmtncm tncm2

 

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 35 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமருக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பாரம்பரியமாக மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடப்பது துரதிர்ஷ்டவசமானது. இப்படி அடிக்கடி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது, தமிழக மீனவர்கள் மத்தியில் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மீன்பிடிக்காக கடந்த 1-ந்தேதி எந்திரப் படகு ஒன்றில் 4 மீனவர்கள், நாகை மாவட்டம் ஆறுகாட்டுத் துறையில் இருந்து சென்றனர். அதுபோல 2-ந்தேதியன்று கோடியக்கரை மீன்பிடி தளத்தில் இருந்து மற்றொரு எந்திரப் படகில் 4 மீனவர்கள் மீன்பிடிக்காகச் சென்றனர். அவர்களை இலங்கைக் கடற்படையினர் 3-ந்தேதி கைது செய்து இலங்கை கங்கேசன்துறைக்கு கொண்டு சென்றனர்.

இதில் முக்கியமாகக் கருதவேண்டியது என்னவென்றால், பாக். நீரிணைப் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடிக்கான இடத்தில் மீன்பிடிப்பதையே தமிழக மீனவர்கள் பின்பற்றுகின்றனர்.

இந்தப் பகுதியில் உரிமை கோருவதையும், சர்வதேச கடல் எல்லை தொடர்பாகவும், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது நிலுவையில் உள்ளது. கச்சத்தீவு தொடர்பாக 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தம், அரசியல் சாசன ரீதியில் செல்லத்தக்கதல்ல என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளேன். இந்த வழக்கில் தமிழக அரசும் இணைந்துள்ளது.

பாக். நீரிணைப் பகுதி மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக எனது அரசு பல்வேறு உதவிகளை செய்கிறது. மீன்பிடி படகுகள் வாங்குவதற்கு மானியம் அளிப்பது போன்ற பல உதவிகள் அதில் அடங்கும்.

ஆழ்கடல் மீன்பிடிப்பு தொடர்பான கட்டமைப்புகளை ஏற்படுத்த ஆயிரத்து 520 கோடி ரூபாயை நிதியாக அளிக்க வேண்டுமென்று ஏற்கனவே கோரியுள்ளேன். அதுபோல கடல் ஆழத்தை பராமரிப்பதற்கு ரூ.10 கோடி அளிக்கவேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூன் 3-ந்தேதி மற்றும் ஆகஸ்டு 7-ந்தேதி ஆகிய தினங்களில் மனு கொடுத்தேன். இதை உடனே அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

கைது செய்த மீனவர்களை விடுவித்தால்கூட, அவர்களின் மீன்பிடி படகுகளை விடாமல் வைத்துக் கொள்ளும் இலங்கை அரசின் நிலை பற்றி உங்களிடம் பலமுறை கூறியிருக்கிறேன். இதனால் மீனவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, தமிழக மீனவர்களின் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

படகுகளை நீண்ட காலமாக நிறுத்தி வைத்திருப்பதாலும், அவற்றை பயன்படுத்தாமல் விட்டுவிட்டு, வடகிழக்கு பருவமழை காலங்களில் நிறுத்தி வைத்திருந்ததாலும், அவை கடுமையான சேதத்துக்கு உள்ளாகி இருக்கும். எனவே, இந்த ஏழை மீனவர்களின் படகுகளையும், உபகரணங்களையும் மீட்டு, நல்ல நிலைக்கு அவற்றை விரைவில் மத்திய அரசு சீர்செய்ய வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை என்பதால், இந்த உணர்வுப்பூர்வமான பிரச்சினையில் சாதகமான முறையில் உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

எனவே தற்போது கைது செய்யப்பட்ட 8 மீனவர்களையும் சேர்த்து, இலங்கை சிறையில் உள்ள 35 தமிழக மீனவர்களையும், அவர்களின் 73 படகுகளையும் விடுவிப்பதற்காக, நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, இலங்கை அரசிடம் இந்தப் பிரச்சினையை எடுத்துச் செல்லவேண்டும் என்று, வெளியுறவுத்துறைக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com