மளிகை கடையில் மது விற்பனை செய்த பெண் கைது!

மலர்கொடியை கைது செய்ய வேண்டி கோரிக்கை விடுத்த அப்பகுதி மக்கள்.

மலர்கொடியை கைது செய்ய வேண்டி கோரிக்கை விடுத்த அப்பகுதி மக்கள்.

ஏற்காடு கீரைக்காடு கிராமத்தில் மளிகை கடையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

ஏற்காட்டில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீரைக்காடு கிராமத்தில் மலர்கொடி(வயது 40) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.  இவர் தனது கடையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக ஏற்காடு காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.

உடனடியாக நேற்று (21.09.2015) இரவு கீரைக்காடு கிராமத்திற்கு சென்ற ஏற்காடு காவல் ஆய்வாளர் குமார் தலைமையிலான காவல் துறையினர், மளிகை கடை மற்றும் மலர்கொடியின் வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் 97 மது பாட்டில்கள் சிக்கியது. 

அப்பகுதி மக்கள் மது பாட்டில்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து இன்று காலை ஏற்காடு காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து மலர்கொடியை கைது செய்ய வேண்டி கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து இன்று மலர்கொடியின் மீது ஏற்காடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மலர்கொடி அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வந்தவர். இவர் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது மது விற்பனை செய்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கடந்த ஜீலை மாதம் மது விற்பனை செய்ததால் 3 மாதங்கள் கீரைக்காடு கிராமத்திற்குள் நுழைய சேலம் கோர்டினால் தடை விதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மீண்டும் மது விற்பனை செய்ததாக இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.    

-நவீன் குமார்.