என்னை வீழ்த்துவதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் தங்களது தூதரகங்களை வெளிப்படையாகவே பயன்படுத்தின : இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குற்றச்சாட்டு!

mahinda

SCMP

“சௌத் சீனா மோர்னிங் போஸ்ட்” பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளதாவது:-

சீனா அளித்த உதவிகளுக்காக, அவர்கள் அந்த நாட்டுக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். அதற்குமாறாக இவர்கள் சீனாவை ஒரு குற்றவாளி போன்று நடத்த முயல்கின்றனர்.

சீனாவை இது தனது நாட்டின் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக கருதவேண்டாம் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

அவர்கள் என்னை தாக்குவதற்கு பதிலாக சீனாவை தாக்குகின்றனர். சீனா இதன் காரணமாக இலங்கைக்கு உதவுவதை நிறுத்த கூடாது.

நான் சீனா சார்பான நபர் என்கின்றனர் அவர்கள். நான் சீனா சார்பான நபரோ அல்லது இந்தியா, அமெரிக்கா சார்பான நபரோ அல்ல. நான் இலங்கை சார்பானவன். நான் இலங்கையை அபிவிருத்தி செய்ய விரும்பினேன். அந்த விடயத்தில் எனக்கு உதவுவதற்கான வளங்களையும், விருப்பத்தையும் அவ்வேளை சீனா மாத்திரமே செய்து கொண்டிருந்தது.

உதாரணத்திற்கு, அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், விமான நிலையத்தையும், நான் இந்தியாவுக்கு வழங்க முன்வந்தேன். ஆனால், அவர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை.

ஆகவே, நான் யாரிடம் செல்வது, எனக்குத் தேவையான நிதியை அவ்வேளை தரக்கூடியதாக இருந்தது சீனா மாத்திரமே. கொழும்பு போர்ட் சிற்றி திட்டத்துக்கு உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் அனுமதி வழங்கப்பட்டது என தெரிவிக்கப்படுவதில் உண்மையில்லை.

அதிகாலையிலிருந்து இரவு வரை மக்கள் என்னை பார்ப்பதற்காக வந்து கொண்டிருக்கின்றனர். இதுவே, எனது புது வாழ்க்கை. அவர்கள் என்னை அரசியலுக்கு மீண்டும் வருமாறு கோருகின்றனர்.

எனக்கு எதிராக வாக்களித்ததற்காக தாங்கள் மன்னிப்பு கேட்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். நான் அவர்களிடம் என்னை ஓய்வெடுக்க விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்.

நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியேயும் எதிர்க்கட்சி என்ற ஒன்று இல்லாத நிலையை உலகில் வேறு எங்கும் நான் கண்டதில்லை. மக்கள் தங்கள் துயரங்களை தெரிவிப்பதற்கு எங்கு செல்வார்கள்?.

பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காத அவர், மக்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம். நான் மீண்டும் அதிகாரத்திற்கு வருவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை.

ஜனவரியில் நடைபெற்ற தேர்தலில் ராஜபக்‌ஷ தோல்வியடைந்தமைக்கு அமெரிக்காவையும், மேற்குலகையும், இந்திய புலனாய்வு பிரிவினரையும்  குற்றம்சாட்டியுள்ளார். இது மிகவும் வெளிப்படையான விடயம், அமெரிக்கா மற்றும் நோர்வே எனக்கு எதிராக செயற்பட்டது பகிரங்கமான விடயம். றோவும் எனக்கு எதிராக செயற்பட்டது..

நான் இந்தியாவிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டேன். நீங்கள் இவ்வாறு செயற்படுவது வெளிப்படையான விடயம் என அவர்களிடம் சுட்டிக்காட்டினேன்.

இலங்கை மண்ணை நட்பு நாடொன்றிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன் படுத்துவதற்கு ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன் என நான் அவர்களுக்கு உறுதியளித்தேன். ஆனால், அவர்களிடம் வேறு திட்டங்கள் இருந்தன.

என்னை வீழ்த்துவதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் தங்களது தூதரகங்களை வெளிப்படையாகவே பயன்படுத்தின.

சீனாவின் நீர்மூழ்கிகள் இலங்கைக்கு வந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சீன நீர்மூழ்கிகள் இலங்கைக்கு வரும்போதெல்லாம் நாங்கள் இந்தியாவுக்கு அது குறித்து அறிவிப்போம்.

சீனா ஜனாதிபதி இங்கு வந்ததால் நீர்மூழ்கிகள் வந்தன. சார்க் மாநாட்டுக்காக 2008 -இல் இந்திய பிரதமர் இங்கு வந்தபோது எத்தனை கப்பல்களும், நீர்மூழ்கிகளும் இங்கு வந்தன என பாருங்கள் எனவும் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

-எஸ்.சதிஸ் சர்மா.