பள்ளி பஸ் சக்கரம் ஏறியதில் 2½ வயது சிறுவன் தலை நசுங்கி சாவு!

child 2

வெற்றிவேல் உயிராக இருந்த போது

child 1 child busஆண்டிமடம் அருகே பள்ளி பஸ் சக்கரம் ஏறியதில் 2½ வயது சிறுவன் தாயின் கண் முன்னே பரிதாபமாக தலை நசுங்கி இறந்தான். இதனால் ஆத்திர மடைந்த கிராம மக்கள் பள்ளி பஸ்சின் கண்ணாடியை அடித்து நொறுக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள இடையக்குறிச்சியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவருடைய மனைவி சீதாலட்சுமி. இவர்களுடைய மகன்கள் வெற்றிவேல் (வயது 2½), ராகுல்காந்தி (4).

தனியார் பள்ளியில் படித்து வரும் ராகுல்காந்தியை 25.09.2014 காலை பள்ளி பஸ்சில் ஏற்றி விடுவதற்காக வெற்றிவேலுவை தூக்கிக் கொண்டு சீதாலட்சுமி சென்றார். பள்ளி பஸ்அருகில் சென்ற போது ராஜீவ்காந்தியின் ஷூ கழன்று விழுந்தது. இதனால் அதை மாட்டி விடுவதற்காக வெற்றிவேலுவை, சீதாலட்சுமி கீழே இறக்கி விட்டு ராகுல் காந்தியின் ஷூவை சரிசெய்தார்.

அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த வெற்றிவேல் பஸ்சுக்கு கீழே சென்று விட்டான். இதை கவனிக்காத பள்ளி பஸ் டிரைவர் பாலமுருகன் பஸ்சை இயக்கினார். அப்போது பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய சிறுவன் வெற்றிவேல் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தான். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பள்ளி பஸ்சின் கண்ணாடியை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த குவாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல முயன்றனர். அப்போது இதை தடுத்த பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. உடனே பொதுமக்களை போலீசார் சமாதானப்படுத்தி, சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பஸ் டிரைவர் பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர்.

-கே.பி.சுகுமார்.