இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த12 பேர் கொண்ட விசாரணைக்குழு!

Navi-Pillayஐ.நா.மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு அமைவாக, இலங்கையில் நடைபெற்ற முப்பதாண்டு கால யுத்தத்தின், கடைசி ஏழு வருடங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 12 உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்துள்ளார்.

ஐ.நா. அதிகாரியான சண்ட்ரா பிடஸ் அம்மையார் இந்த விசாரணைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்.

இரு சட்ட மருத்துவ நிபுணர்கள், ஒரு சட்ட ஆய்வாளர், பாலின வல்லுநர் ஒருவர், விசாரணை அதிகாரிகள் என 12 பேர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். அதேசமயம், இக்குழுவினருக்கு வெளி நிபுணத்துவ உதவிகள் மற்றும் புலனாய்வு ஒத்துழைப்பை வழங்குவதற்காக இரண்டாம் நிலை உதவிக் குழு ஒன்றும் நியமிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் அனைவராலும் மதிக்கப்படும் நியூஸிலாந்தின் நீதிபதி டாம் சிஸ்வியா கார்ட்ரைட்டும் இந்த விசாரணைக் குழுவில் ஒருவராக நியமிக்கப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தக் குழுவின் பணிகள் இந்த ஜூன் மாதம் தொடங்கி, பத்து மாதங்களில் முடிவுறும் என தெரிகின்றது.