மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரம் வழங்கப்பட மாட்டாது: இலங்கை நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ. எல் .பீரிஸ் விளக்கம்!

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ. எல் .பீரிஸ்

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ. எல் .பீரிஸ்

இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோதியுடன் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த வாரத்தில் நடத்திய பேச்சுவார்தை குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று (04.06.2014) கேள்வி எழுப்பப்பட்டது.

இலங்கை எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த கேள்வியை எழுப்பினார்.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, புது டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நரேந்திர மோதியை சந்தித்த வேளையில், இலங்கையில் நல்லிணக்கத்துக்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் சுஜாதாசிங், இலங்கை தமிழர்கள் விடயத்தில் உரிய நடவடிக்கைக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.

இதற்காக, 13-வது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது முக்கியமானது என்றும் இந்திய தரப்பு எடுத்து கூறியது.

எனவே, இலங்கை அரசாங்கம் இந்த கோரிக்கைளை ஏற்று, உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று இந்திய தரப்பு நம்புவதாகவும் சுஜாதாசிங் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க கோரினார்.

இதற்கு பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், ஐதராபாத் இல்லத்தில் இடம் பெற்ற சந்திப்பின் போது, இலங்கை அரசாங்கம் அதிகார பரவலாக்கலில், காவல்துறை அதிகாரம் குறித்து தெளிவான விளக்கத்தை வழங்கியதாக குறிப்பிட்டார்.

இலங்கையை பொறுத்தவரையில் இனப்பிரச்சினை தீர்வு அதிகார பரவலாக்கலின் போது, காவல்துறை அதிகாரம் வழங்கப்பட மாட்டாது என இந்திய தரப்புக்கு தெளிவாக்கப்பட்டதாக ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் இனங்களை மையமாக வைத்து, செயற்பட முடியாது என்ற காரணத்தையும், இந்திய தரப்புக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எடுத்துரைத்தாக ஜீ. எல். பீரிஸ் குறிப்பிட்டார்.

சர்வதேச சமூகத்தையே ஏமாற்றி வரும் இலங்கை அரசாங்கம், இந்தியாவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமா? என்பது சந்தேகமே.