பாரதீய ஜனதா தலைமையில் புதிய ஆட்சி அமைந்தும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியம் நிற்கவில்லை: பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம்!

jayalalithaமீன்பிடித் தடை காலம் முடிவடைந்ததை அடுத்து 46 நாட்களுக்குப் பின்னர் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. மத்தியில் பாரதீய ஜனதா தலைமையில் புதிய ஆட்சி அமைந்தும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியம் நிற்கவில்லை. தமிழக மீனவர்கள் மீண்டும் தாக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க நேற்று (31.05.2014) காலை புறப்பட்டு சென்றனர். கச்சத் தீவுக்கும், தலை மன்னாருக்கும் இடையே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 10-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன் பிடி சாதனங்களை சேதப்படுத்தியதுடன், 6 படகுகளையும், அதில் இருந்த 29 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றனர். அங்கு பழுதாகி நின்ற படகில் இருந்த 4 மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கை கடற்படையின் இந்த செயலுக்கு இந்தியா தனது அதிருப்தியை தெரிவிக்க வேண்டும். மீனவர்கள் இடையிலான பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு முயற்சி எடுத்தும் இது தொடர்கிறது. மீனவர்கள் பிரச்சனையை தீர்க்க நிரந்தர தீர்வு காணவேண்டும். முன்னாள் பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உறுதியான முடிவை எடுக்கும் என்று தமிழகம் நம்புகிறது.

எனவே,தமிழக மீனவர்கள் 33 பேரையும், இலங்கை அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.