காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி Dr.பல்பீர் சிங் ஜவுக்கான் நியமனம்: தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் தீவிர சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி!

உச்ச நீதிமன்ற நீதிபதி Dr.பல்பீர் சிங் ஜவுக்கான்

உச்ச நீதிமன்ற நீதிபதி Dr.பல்பீர் சிங் ஜவுக்கான்

1594251 copy1594252 copyகாவிரி மேலாண்மை வாரியத்தின் தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி Dr.பல்பீர் சிங் ஜவுக்கான் நியமிக்கப்பட்டுள்ளார். இது தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் தீவிர சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாகும். இதன் மூலம் காவிரி நதிநீர் பிரச்சனைக்கு சட்ட ரீதியான நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது.

காவிரி சிறு ஊற்றாக, துள்ளியோடும் காட்டாறாக, பாறைகளைப் பிளக்கும் நீர்வீழ்ச்சிகளாக, அகண்ட காவிரியாக, முடிவில்லாத ஆழங்களுக்குள் நீளும் நீர்சுழிப்புகளாக காவிரிக்கு எத்தனை முகங்கள். அப்பப்பா, காவிரியின் அழகைப் பற்றியும், ஆக்கத்தைப் பற்றியும், ஆளுமையைப் பற்றியும் ராஜராஜசோழன், ராஜேந்திரசோழன், இளங்கோவடிகள், கம்பன், ஒட்டக்கூத்தன், அருணாச்சலக் கவிராயர், தியாகைய்யர், சியாமாசாஸ்திரி, நாயன்மார்கள், ஆழ்வார்கள், திருவாடுதுறை ஆதீனங்கள் என அவர்களது பட்டியல் முடிவில்லாமல் நீண்டு கொண்டேயிருக்கிறது.

காவிரிப் புகழைப் பாடியிருப்பவர்களின் பட்டியலை நினைக்கும் போது படிக்கும் நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அத்தனை மனிதர்களையும் காவிரி பாதித்துள்ளது. இப்படி பெருமைக்குரிய காவிரி நீரைப் பங்கிட்டு கொள்வதில் உள்ள பிரச்சனைப் பல்லாயிரம் ஆண்டுகளாக இடியாப்பச் சிக்கலாக இருந்து வந்துள்ளது என்பதுதான் கசப்பான உண்மை.

தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா இடைவிடாது மேற்கொண்ட தீவிர முயற்சியால், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு உச்சநீதிமன்ற உத்தரவால் 19.02.2013 அன்று மத்திய அரசு அரசிதழில் வெளியிடப்பட்டு, அதற்கான அறிவிப்பு 20.02.2013 அன்று வெளியானது.

இது, எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. 22 ஆண்டு காலம் நான் இடைவிடாது நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி. இந்த செய்தி எனக்கு அளவிட முடியாத மகிழ்ச்சியை அளிக்கிறது. இது, எனது தனிப்பட்ட வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றுதான் சொல்வேன்.

முப்பது ஆண்டுகால பொதுவாழ்வில் இன்று தான் சாதனை புரிந்ததாக எனக்கு மனநிறைவு ஏற்பட்டுள்ளது. எத்தனைபேர் என்னை புகழ்ந்தாலும் நான் சாதனை செய்ததாக இதுவரை நினைக்கவில்லை. இதுதான் மிகப்பெரிய சாதனை என்ற மனநிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. இது எனக்கும், எனது அரசுக்கும் கிடைத்த வெற்றி. காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி. அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் கிடைத்திருக்கிறது என்று தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா 20.02.2013 அன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

‘கடந்த தூரத்தைக் கணக்கிட்டால் கடக்கும் தூரம் குறைந்து விடும்! ஆறிய கஞ்சி பழங்கஞ்சி ஆகிவிடும்’ என்பதைக் கருத்தில் கொண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மத்திய அரசிதழில் அரங்கேறிய இரண்டு நாட்களுக்கு பிறகு அதாவது 22.02.2013 அன்று காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை உடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார்.

தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடும் முயற்சியால் உச்சநீதிமன்றத்தில் போராடி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டதற்காக அவருக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவிக்கும் வகையில் காவிரி பாசன விவசாய சங்கத் தலைவர் மன்னார்குடி ரெங்கநாதன் தலைமையில் 09.03.2013 அன்று மாபெரும் விழா தஞ்சையில் நடைப்பெற்றது. அவ்விழாவில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு ‘பொன்னியின் செல்வி’ என்றப் பட்டமும், வெங்கலச்சிலையும் பரிசாக வழங்கப்பட்டது.

அதன் பிறகு 11.03.2013 அன்று காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை உடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் கடிதம் எழுதினார்.

ஆனால், தமிழகத்தை மாற்றான் தாய் மனபான்மையோடு நடத்தி வரும் மௌன சாமியார் மன்மோகன்சிங் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் கடிதத்திற்கு மதிப்பளிக்கவில்லை.

தமிழக விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க வேறு வழியில்லாமல் காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைக்க மத்திய அரசுக்கு உத்திரவிட வேண்டுமெனக்கோரி தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உத்தரவின்படி 18.03.2013 அன்று தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அவ்வழக்கு நீதிபதிகள் ஆர்.எம். லோத்தா, குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு 22.04.2013 அன்று விசாரணைக்கு வந்தது.

இதன் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றபோது, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதன் தொடர் நடவடிக்கை குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக கூடுதல் சொலிசிடர் ஜெனரல் தெரிவித்ததை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம். காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதை உறுதிபடுத்துவதற்காக ஒரு தற்காலிக ஏற்பாடாக மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் தலைமையில் சம்பந்தப்பட்ட காவிரி டெல்டா மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் அடங்கிய மேற்பார்வை குழு ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டுமென்று 10.05.2013 அன்று உத்தரவிட்டது.

அதன்பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு 17.05.2013 அன்று ஒரு கடிதம் எழுதினார். அதில், காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக நீர்வளத்துறை செயலர் தலைமையில் மேற்பார்வைக் குழுவை அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது இடைக்கால ஏற்பாடுதான்.

எனவே, தமிழ்நாடு மற்றும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் துயரத்தை போக்க வேண்டும் என்றால், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிர் நீர் ஒழுங்குமுறை குழு அமைப்பதுதான் ஒரே நிரந்தர தீர்வு ஆகும்.

தமிழக விவசாயிகளின் துன்பத்தைப் போக்குவதற்கு, நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இறுதித் தீர்ப்பில் உள்ள அறிவிப்புகள் தொடர்பான நடைமுறைகளை இனிமேலும் தாமதப்படுத்தக்கூடாது. மேலும் காலம் தாழ்த்தாமல். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை அமைக்க மத்திய நீர்வளத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா உருக்கமாக தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு இடைக்கால ஏற்பாடாக தற்காலிக காவிரி மேற்பார்வைக் குழுவை 24.05.2013 அன்று அமைத்தது. மத்திய நீர்வளத்துறை செயலர் தலைமையிலான இக்குழுவில் தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில தலைமைச் செயலர்கள் இடம் பெற்றுள்ளனர். மத்திய நீர் ஆணைய தலைவரும் இடம் பெற்றுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை இந்த குழு, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்தும் பணியை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உத்தரவின் பேரில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மத்திய நீர்வளத்துறை செயலாளரிடம் தொடர்பு கொண்டு, நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரியில் தமிழகத்திற்குரிய தண்ணீரை திறந்து விடுவது குறித்து முடிவு செய்ய மேற்பார்வைக் குழுவின் முதல் கூட்டத்தை கூட்டுமாறு கேட்டுக் கொண்டார்.

தமிழக அரசின் இந்த கோரிக்கையை ஏற்று மேற்பார்வைக்குழுவின் முதல் கூட்டம் 01.06.2013-ம் தேதி காலை 10.30 மணி அளவில் டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெறும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு தெரிவித்தது.

காவிரி டெல்டா விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மேற்கொண்ட இடைவிடாத நடவடிக்கைகளின் பலனாக காவிரி மேற்பார்வைக் குழுவின் முதல் கூட்டம் 01.06.2013 அன்று டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், ‘ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் தர வேண்டிய 10 டி.எம்.சி. அடி நீர், கடந்த ஆண்டு சரிசம விகிதாச்சார முறைப்படி ஏற்பட்ட குறைபாட்டு நீரளவான 53.18 டி.எம்.சி. அடி நீர் என, 63.18 டி.எம்.சி. அடி நீரை தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டுமென தமிழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதற்கிடையில் கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா தலைமையில் 06.06.2013 வியாழக்கிழமை அன்று கர்நாடக சட்டப்பேரவை, சட்டமேலவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் குமாரசாமி, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், சதானந்த கௌடா, ம.ஜ.த சட்ட மேலவைக் கட்சித் தலைவர் எம்.சி.நானையா, பிஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஸ்ரீராமுலு, மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா, ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல், வீட்டு வசதித் துறை அமைச்சர் அம்பரீஷ், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல், உயர் கல்வித் துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே, தலைமைச் செயலாளர் எஸ்.வி.ரங்கநாத், தலைமை வழக்குரைஞர் ரவிவர்மகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதில் கர்நாடகத்துக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதால், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 4 மாதங்களில் தமிழகத்திற்கு தர வேண்டிய 134 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட முடியாது என்று முடிவெடுக்கப்பட்டது. தமிழகத்துக்குத் தர வேண்டிய நீரின் அளவை 97.82 டி.எம்.சியாக குறைக்கும்படி காவிரி மேற்பார்வைக் குழுவிடம் முறையிடப்போவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.

இந்நிலையில் காவிரி மேற்பார்வைக் குழுவின் இரண்டாம் கூட்டம் 12.06.2013 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் 63.18 டி.எம்.சி. அடி நீரை கர்நாடகம் விடுவிக்க வேண்டும் என தமிழகத்தின் சார்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

எனினும், கர்நாடகாவின் நான்கு பெரிய நீர்த் தேக்கங்களுக்கு போதுமான அளவில் நீர்வரத்து வராததால், தற்சமயம் தமிழகத்திற்கு தண்ணீர் விடுவிக்க இயலாத நிலை உள்ளது என இக்குழுவின் தலைவர் முடிவெடுத்து தமிழகத்திற்கு நீர் விடுவிப்பது குறித்து ஜூலை 2013 முதல் வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்கலாம் என தீர்மானித்தார்.

தில்லியில் 12.06.2013 அன்று நடைபெற்ற காவிரி மேற்பார்வைக் குழு கூட்டம் தொடர்பாக அதன் தலைவரிடம் தமிழக தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் 25.06.2013 அன்று ஒரு மனு தாக்கல் செய்தார்.

அம்மனுவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தமிழகத்துக்கு 134 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும். அந்த அளவை 97.82 டி.எம்.சியாக குறைக்க வேண்டும் என்ற கர்நாடகத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவது மட்டும்தான் மேற்பார்வைக் குழுவின் கடமை. இதுபோன்றக் கோரிக்கையை ஆலோசிப்பது ஏற்புடையது அல்ல என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஜீன் மாதம் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நீதிபதிகள் ஆர்.எம். லோதா, சுதான்சு ஜோதி முகோபாத்யாய அடங்கிய அமர்வு 05.07.2013 வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தியது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.எஸ். வைத்தியநாதன் முன்வைத்த வாதம்: உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள காவிரி மேற்பார்வைக் குழுவை காவிரி மேலாண்மை வாரியமாகக் கருத முடியாது என்று கர்நாடகம் கூறுகிறது. இதன் மூலம், தமிழகத்துக்குத் தண்ணீர் தராமல் இழுத்தடிக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் நோக்கம் தெளிவாகிறது.

கர்நாடகத்தின் நான்கு அணைகளில் போதுமான நீர் உள்ளது. அந்த மாநிலத்தில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இருந்த போதும், கடந்த மாதம் வழங்க வேண்டிய 10 டி.எம்.சி நீரை வழங்க கர்நாடகம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏற்கெனவே, கடந்த ஆண்டில் வழங்க வேண்டிய 53 டிஎம்சி நீரைக் கேட்டு தமிழகம் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. எனவே, காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று வைத்தியநாதன் வாதிட்டார்.

அதைக் கேட்ட நீதிபதி லோதா, ‘அணைகளில் போதுமான தண்ணீர் இல்லை என்று கர்நாடக மாநிலம் கூறுகிறது. கர்நாடகத்தில் மழை பெய்து வருவதாக நீங்கள் கூறுகிறீர்கள். அங்கு நன்றாக மழை பெய்யட்டும். அதற்குள்ளாக உங்கள் மனுவை விசாரிக்க வலியுறுத்துவது ஏன்? இந்த மனு மீது மூன்று வாரங்களுக்குப் பிறகு விசாரணை நடத்தப்படும். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக தமிழகம் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக மத்திய அரசு தனது நிலையை மூன்று வாரங்களுக்குள் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவுக்கு கர்நாடகம் தாக்கல் செய்த பதில் மனுவில், மேலாண்மை வாரியம் தொடர்பாக நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவை ‘பரிந்துரையே’ தவிர ‘உத்தரவு’ கிடையாது.

மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில், அந்த வாரியத்தின் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்று தமிழகம் கோருகிறது. மேலும், காவிரி மேற்பார்வைக் குழுவின் பணிக்கு தமிழகம் முட்டுக்கட்டை போடுகிறது. தமிழகத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கர்நாடகம் வலியுறுத்தியது.

ஆனால், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை உடனே அமைக்காமல் மத்திய அரசு மௌனம் சாதித்து வந்தது. ஆனால், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா தொடர்ந்து சட்ட ரீதியாகப் போராடி வந்தார்.

16.05.2014 அன்று பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவரவிருக்கும் இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, 13.05.2014 அன்று காவிரி மேலாண்மை வாரியத்திற்கு தலைவரை, மத்திய காங்கிரஸ் அரசு நியமித்துள்ளது. இதன் மூலம் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, மத்தியில் ஆட்சி அமைவதற்கு முன்பாகவே, மகத்தான வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

நாம் ஆட்சி அமைக்காவிட்டாலும் பரவாயில்லை! ஆனால், மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்து விட கூடாது என்பதில் காங்கிரஸ் தலைமை மிகவும் கவனமாக இருக்கிறது. அவற்றின் விளைவுதான் இந்த காவிரி மேலாண்மை வாரியத் தலைவர் அறிவிப்பு.

இந்த அறிவிப்பு, பாரதிய ஜனதா கட்சியின் தலைமைக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வத் தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில், பாரதிய ஜனதா ஏதோ ஆட்சி பொறுப்பில் அமர்ந்து விட்டதை போல, அமைச்சர்கள் பெயர் பட்டியல் வரை தயார் செய்து ஊடகங்களுக்கு கசிய விட்டு வருகிறது.

இதற்கு அர்த்தம் என்னவென்றால், நாங்கள் தான் ஆட்சி அமைக்க போகிறோம். எங்களுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் கொடுக்கலாம். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை. முதலில் புக்கிங் செய்தால்தான் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற ஒரு மாயை தோற்றத்தை, பாரதிய ஜனதா தலைமை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், பாரதிய ஜனதாவின் இந்த கனவு நிச்சயம் பழிக்காது.

ஏனென்றால், இத்தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளுக்குமே தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு சீட் கிடைக்காது. மாநில கட்சிகளின் தயவில் தான் ஆட்சி அமைக்க வேண்டிய நிலை உருவாகும்.

அப்போது தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, இந்திய அரசியலில் மிகப் பெரிய சக்தியாக நிச்சயம் விளங்குவார். இது வெறும் கணிப்பு அல்ல! இது தான் நாளைய அரசியல் கணக்கு! இது வெற்று வார்த்தையல்ல! இது தான் நாளை நடைபெற இருக்கும் சத்திய வாக்கு.

 -டாக்டர்.துரைபெஞ்சமின்.