கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவும்! இழுபறியில் இருக்கும் எல்லைப் பிரச்சனையும்!

கண்ணகி  கோயில்

கண்ணகி கோயில்

மங்கலா தேவி கண்ணகி கோயில் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளி என்ற ஊரிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடி எனுமிடத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது கடல் மட்ட அளவில் இருந்து சுமார் 5000 மீட்டர் உயரத்தில் உள்ளது.

சித்திரா பௌர்ணமி தினத்தன்று ஒரு நாள் மட்டுமே இக்கோயில் பகுதிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இங்கிருந்து ஒரு பக்கம் கிழக்கு மலைத்தொடர்களையும், அதனுடன் தமிழ் நாட்டில் இணைந்திருக்கும் சில கிராமப்பகுதிகளையும் நன்றாக காணலாம்.

கோவலனுக்கு பாண்டிய மன்னன் முழுமையாக விசாரிக்காமல் மரண தண்டனை அளித்துக் கொன்று விட்டதறிந்து, கோபத்துடன் கண்ணகி பாண்டிய மன்னனின் அரச சபையில் அவன் தவறை உணர்த்தித் தவறாக நீதி வழங்கிய மதுரை மாநகரமே தீப்பற்றி எரியட்டும் என்று சாபம் விட்டு, மதுரையை எரித்துவிட்டு, அங்கிருந்து வெளியேறி 14 நாட்கள் நடந்து திருச்செங்குன்றம் எனும் மலையில் இருந்து தேவலோகம் சென்றதாக வரலாறு சொல்கிறது. இந்த இடத்தில்தான் மங்கலாதேவி கண்ணகி கோயில் இருக்கிறது.

தமிழக அரசின் சார்பில் இன்று (14.05.2014) கண்ணகி சிலைக்கு அமைச்சர்கள் மலரஞ்சலி செலுத்தினார்கள்.

தமிழக அரசின் சார்பில் இன்று (14.05.2014) கண்ணகி சிலைக்கு அமைச்சர்கள் மலரஞ்சலி செலுத்தினார்கள்.

இக்கோயில் வளாகத்தினுள் கேரள மக்கள் வழிபடும் துர்க்கையம்மன் கோயில் ஒன்றும் உள்ளது. இந்தக் கோயிலில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகள் நடத்துகின்றனர். தமிழ்நாடு, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த அனைவரும் இக்கோயிலில் வழிபட்டுச் செல்கின்றனர்.

தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் இந்த மங்கலா தேவி கண்ணகி கோயில் மாநிலங்களுக்கிடையிலான எல்லைப் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த கண்ணகி கோவிலின் முகப்பு வாயில், மதுரையை நோக்கியே அமைந்துள்ளது. 1817-ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வே மிகவும் பழமையானது. இந்த சர்வேயில், கண்ணகி கோவில் தமிழக எல்லைப் பகுதியிலேயே இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதன் பின்னர், 1893, 1896 -ல் நடத்திய சர்வேயும், 1913, 1915 -ல் வெளியிடப்பட்ட எல்லை காட்டும் வரைபடங்களும் இதையே வலியுறுத்துவதாக உள்ளன. கடந்த 1959 வரை கேரள அரசு, கண்ணகி கோவில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை.

1976 -ல், தமிழ்நாடு கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும், கண்ணகி கோவில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழகப் பகுதியில் இருப்பது ஒப்புக் கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், கூடலூரில் மங்கலாதேவி கண்ணகி கோட்ட சீரமைப்புக்குழு துவக்கப்பட்டு கோவிலைப் புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. 1976-ல் இந்த சீரமைப்புக் குழு, அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்து உதவி கேட்டது.

கூடலூரைச் சேர்ந்த, கே.பி.கோபால் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது கண்ணகி கோவிலுக்கு செல்லப் பாதை அமைக்க வேண்டும் என சட்டசபையில் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, தமிழகப்பகுதி வழியாக கண்ணகி கோவிலுக்கு ரோடு போடுவதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கிடையில் ஊழலுக்காக மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி 1976 ஜனவரி 31-ல் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்ட மூன்றாவது நாள் அதாவது 1976-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ந் தேதி, தி.மு.க அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த, நீதிபதி சர்க்காரியாவை மத்திய அரசு நியமித்தது. கருணாநிதியின் அரசியல் செல்வாக்கு சர்க்காரியா கமிஷனில் சிக்கி ஒளி இழந்து போனது. இதனால் இத்திட்டம் பாதியிலேயே நின்று போனது.

இந்நிலையில் 1976-ல் கேரள வனப்பகுதி வழியாக, தேக்கடியில் இருந்து கண்ணகி கோவிலுக்கு அவசர அவசரமாக கேரள அரசு ஒரு பாதை அமைத்தது. இவ்வாறு போடப்பட்ட இந்தப் பாதையின் வழியாகத்தான், தமிழக பக்தர்கள், கண்ணகி கோயிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. தற்போது இந்த சாலையை வைத்துக் கேரள அரசு கண்ணகி கோயில் கேரளாவிற்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முழுநிலவு தினத்தன்று இந்த மங்கலா தேவி கண்ணகி கோயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர்.

இந்தக் கோவில் வழிபாட்டிற்காக தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி அதன்படி வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

வருடந்தோறும் இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும், கேரளா அரசு சார்பில் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தைகள் நடத்தி சித்திரை முழுநிலவு திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிக்கின்றனர். மற்ற நாட்களில் இங்கு செல்ல யாருக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை.

கேரள அரசின் பலவிதமான கட்டுப்பாடுகளுக்கு இடையே தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சித்திரை முழுநிலவு தினத்தன்று மட்டும் இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சித்திரை முழுநிலவு தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதியில்லாததால் இந்தக் கோயில் பராமரிப்பின்றி கோவிலின் பல பகுதிகள் சிதைந்து போய்விட்டன.கோவில் சுவற்றின் கற்கள் உடைந்து போய் கிடக்கின்றன. கண்ணகி சிலையும் சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டது.

தற்போது, சித்திரை முழுநிலவு விழா நேரத்தில் சந்தனத்தால் கண்ணகி முகம் வடிவமைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.

இப்படியே சில காலம் கவனிக்காத நிலை தொடர்ந்தால் வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவில் அழிந்து போகும். கோவிலைக் காப்பாற்ற இரண்டு மாநில அரசுகளும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தக் கோயிலின் பக்தர்களும் தமிழ் மேல் பற்றுடைய ஆர்வலர்களும் தொடர்ந்து கோரி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை என்ற ஒரு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் சித்திரை முழுநிலவு தினத்தன்று கண்ணகி கோயிலில் வழிபாடுகள் செய்வதுடன் அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்து வருகிறது.

இந்த அமைப்பு தமிழ்நாட்டின் கூடலூர் (தேனி) மலைப்பகுதியிலுள்ள பளியங்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்குத் தனிப்பாதை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் கண்ணகி கோயில் தமிழ்நாட்டுக்குரியது அதை மீட்க வேண்டும் என்றும் கோரி வருகிறது.

கூடலூர் பளியங்குடி வழியாக மங்கலதேவி கண்ணகி கோயிலுக்குச் செல்லும் வழியில் கூடலூரைச் சேர்ந்த கந்தவேல் என்பவர் அவருக்குச் சொந்தமான இடத்தில் சில வருடங்களுக்கு முன்பு மங்கலதேவி கண்ணகி கோயில் என்ற பெயரில் புதிய கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார். இந்தக் கோயிலுக்கும் பக்தர்கள் வந்து வணங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் பழமையான கோயில் தமிழ்நாடு- கேரள எல்லைப்பகுதியில் இருக்கும் நிலையில் புதிய கோயில் பக்தர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும் இது மங்கலதேவி கண்ணகியைக் களங்கப்படுத்துவதாகவும் அமையும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினரால் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனைக்கு சட்ட ரீதியாக போராடி, முழுமையான தீர்வினைப் பெற்று தந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, கண்ணகி கோவில் எல்லைப் பிரச்சனைக்கும் சட்ட ரீதியான தீர்வினை அவருடைய ஆட்சிக் காலத்திலேயே பெற்று தரவேண்டும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.