போப்பாண்டவர் பிரான்ஸிஸ் மன்னிப்புக் கோர வேண்டும் : இலங்கையில் உள்ள பௌத்த அமைப்புக்கள் மிரட்டல்!

பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்

பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்

இலங்கையில் மத நல்லிணக்கம் காணப்படவில்லை என்று, கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப்பாண்டவர் பிரான்ஸிஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கருத்து வெளியிட்டிருந்தார்.

இதற்கு இலங்கையில் உள்ள பௌத்த அமைப்புக்களான பொது பல சேனாவும், இராவண சக்தியும், கத்தோலிக்க திருச்சபையின் போப்பாண்டவர் பிரான்ஸிஸ் மன்னிப்புக் கோர வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

போப்பாண்டவர் பிரான்ஸிஸ்

போப்பாண்டவர் பிரான்ஸிஸ்

இலங்கையில் பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தினரும் இங்கு நல்லிணக்கத்துடனேயே வாழ்கின்றனர். மதங்களிடையே மோதல்கள் கிடையாது.

ஒரு சில அடிப்படைவாத மதச் சக்திகளின் நடவடிக்கைகள் காரணமாகவே சிறு சிறு பிரச்சினைகள் தலைதூக்குகின்றனவே தவிர, முழு நாட்டிலும் மத நல்லிணக்கம் காணப்படுகிறது.

எனவே, இங்கு மத நல்லிணக்கம் இல்லையென்று கூறிய கருத்துகளுக்கு பாப்பரசர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பாப்பரசர் உலகம் மதிக்கும் ஒரு மதத்தலைவர். அவர் இங்கு வரலாம், போகலாம். ஆனால், எமது உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடக்கூடாது. எமது நாடு தொடர்பில் கருத்துகளையும் வெளியிடக்கூடாது.

ஆனால், இலங்கையில் எந்தெந்த பிரதேசத்திற்கு பாப்பரசர் போக வேண்டும். யார் யாரை சந்திக்க வேண்டும் என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்.

இல்லாவிட்டால், இலங்கை தொடர்பிலான பிழையான கருத்துகளுக்கு அவர் இரையாகி விடுவார் என்று இராவணா சக்தியின் தலைவர் இத்தேகந்தே தம்மானந்த தேரர் மிரட்டல் விடுத்துள்ளார்.

புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இவரது வருகையை தடுப்பதற்காகதான் இலங்கையில் உள்ள பௌத்த அமைப்புக்கள் இதுப்போன்ற மிரட்டல்களை விடுத்துள்ளனர்.