ஆதார் அடையாள அட்டை குறித்து தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனுப்பிய கடிதமும், ஆதார் அடையாள அட்டை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று (24.03.2014) வழங்கிய அதிரடி உத்தரவும்! – ஒரு முழுமையான ஆய்வு!

jjதமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு 30.09.2013 அன்று ஒரு கடிதம் (P.R.NO 521) அனுப்பி இருந்தார். அதில் சமையல் கியாஸ் நேரடி மானியம் குறித்தும், ஆதார் அடையாள அட்டை குறித்தும் விரிவான கருத்தை அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். அக்கடிதத்தின் உண்மை நகல் நமது “உள்ளாட்சித்தகவல்” இணைய ஊடகத்தில் அன்றே செய்தியாக வெளிவந்தது. அந்த செய்தியை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.http://www.ullatchithagaval.com/?p=3601

அதில், சமையல் கியாஸ் நேரடி மானியம் ஆதார் எண் பெற்றவர்களுக்குதான் வழங்கப்படும். ஆனால், தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் ஆதார் எண் வழங்கப்படும் பணி மிகவும் மந்தமான நிலையில் நடக்கிறது. இதில் ஏராளமான குழப்பங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் ஆதார் அட்டை பெற தகுதியுடைய 6 கோடியே 74 லட்சம் பேர் உள்ளனர். ஆனால் இதுவரை 2 கோடியே 52 லட்சம் பேருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. இப்படி இருக்க இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும்?

இதில் குழப்பமும், பொது மக்களுக்கு தொல்லையும் தான் ஏற்படும். இந்த திட்டத்தை அமல்படுத்த 3 மாத காலம் அவகாசம் வழங்கி இருக்கிறார்கள். 3 மாதத்திற்குள் ஆதார் எண்ணை பெறாதவர்கள் எப்படி கியாஸ் நேரடி மானியத்தை பெற முடியும்.

ஆதார் அட்டையை எந்த ஒரு சேவை பணிக்கும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பில் கூறியுள்ளது. அப்படி இருக்க நேரடி மானிய திட்டத்துக்கு அதை பயன்படுத்துவது சட்டத்திற்கு விரோதமாக அமைகிறது.

ஆதார் அட்டை இன்னும் வழங்கப்படாத நிலையிலும், வங்கிகளில் உரிய வசதிகள் செய்து தரப்படாத நிலையிலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவது சரியாக இருக்காது. மேலும், கோர்ட்டு வழங்கியுள்ள உத்தரவுகளுக்கும் எதிராக இது அமைந்துள்ளது.

இதனால் உரிய உத்தரவாதம் அளிக்கும் வரையில் இந்த திட்டத்தை அமல்படுத்தக்கூடாது. இதை முற்றிலும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதுவரை இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆதார் அடையாள அட்டைப் பணிக்காக சுமார் 50 ஆயிரம் கோடியை மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு தனியாருக்கு தாரை வார்த்ததோடு மட்டுமில்லாது, அனைத்துப் பணிகளுக்கும் தேசிய அடையாள அட்டையாக ஆதார் அட்டையை பயன்படுத்த வேண்டும் என்று கோடிக்கணக்கில் செலவழித்து விளம்பரமும் செய்து வந்தது.

இந்நிலையில், அரசின் எந்த ஒரு சேவைக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என கோரும் அனைத்து உத்தரவுகளையும் வாபஸ் பெறுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (24.03.2014) உத்தரவிட்டுள்ளது.

ஆதார் அட்டைக்கு எதிரன வழக்கை இன்று (24.03.2014) விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சவுஹான் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த உத்தரவை  பிறப்பித்தது.

Hon'ble Dr. Justice Balbir Singh Chauhan

Hon’ble Dr. Justice Balbir Singh Chauhan

மேலும், ஆதார் அட்டையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட ‘உதய்’ ( Unique Identification Authority of India -UIDAI) நிறுவனம், ஆதார் அட்டை வைத்துள்ள நபர் குறித்த எந்த ஒரு தகவலையும், அந்த அட்டை தாரரின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு அரசு ஏஜென்சியுடனும் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

scஅத்துடன் இந்த ஆதார் அடையாள அட்டை திட்டம் தனி நபர்களின் அந்தரங்க உரிமையை மீறுவதோடு மட்டுமல்லாது, இந்த திட்டத்தின் ஆதாரமாக கருதப்படும் ‘பயோமெட்ரிக்ஸ்’ தொழில்நுட்பம், சோதித்து பார்க்கப்படாததாகவும், நம்பகத்தன்மையற்றதாகவும் உள்ளது என்றும், போதுமான சரிபார்த்தல் இல்லாமலேயே பொதுமக்கள் பணம் தனியார் நிறுவனத்திற்கு திருப்பிவிடப்படுவதாகவும் நீதிபதிகள் கடுமையாக சாடினர்.

முன்னதாக மானிய விலை சிலிண்டர் பெற ஆதார் அட்டை கட்டாயம் பெற வேண்டும் என்றும், அந்த அட்டையின் எண்ணை எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்யும் ஏஜென்சியில் பதிந்தால்தான், மானிய தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு, அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, மானிய சிலிண்டருக்கு ஆதார் அட்டை கட்டாயமல்ல என்று அறிவித்தது.

இருப்பினும் வேறு சில அரசு சேவைகளுக்கு ஆதார் அட்டை எண் கோரப்படுவதும், ஆதார் அட்டை வாங்கிவிட்டீர்களா என ஊடகங்களில் அரசு மேற்கொள்ளும் பிரச்சாரமும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையிலேயே, உச்ச நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.

                           -டாக்டர்.துரைபெஞ்சமின்,  ஆசிரியர்.