ஜெனிவாவில் நவநீதம்பிள்ளை அறிக்கை : ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூன் பாராட்டு!

un navanetham bongiUN SEC UN SEC.jpg2 UN SEC.jpg3 UN SEC.jpg4

ஜெனிவாவில் இன்று (03.03.2014) ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 25 -வது கூட்டத் தொடரில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூன் வரவேற்றுள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் இந்த வருடத்துடன் முடிவடைகிறது. அவரது பதவிக்காலத்தில் அவர் மேற்கொண்ட பணிகளை ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூன் பாராட்டியுள்ளார். நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பொறுப்புக் கூறும் முக்கியத்துவத்தையும் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

நவநீதம்பிள்ளையின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே நிராகரித்துவிட்டது. மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையை இந்த மாதத்திற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக தனது அறிக்கையை ஆணைக்குழுவில் சமர்ப்பித்திருந்தார். எனினும் அவரது அறிக்கை ஏற்கனவே பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய ஒரு சர்வதேச பொறிமுறை ஸ்தாபிக்கப்பட வேண்டும் மற்றும் உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் எப்படியான பொறுப்புக் கூறும் செயல் முறையாக இருந்தாலும் அது கண்காணிக்கப்பட வேண்டும் என நவநீதம்பிள்ளை தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

இந்த யோசனைகளை நிராகரித்த இலங்கை அரசாங்கம், அது சம்பந்தமாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் படி உள்நாட்டு செயல்முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த விடயம் அரசியலாக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.