‘அரிசியை வேளாண் விளைபொருள்’ என்று அறிவித்து, சேவை வரியை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடிதம்

jayalalithapr120214_0881 copy pr120214_0882 copy

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா இன்று (12.02.2014) ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

மத்திய நிதி அமைச்சகம் அரிசி மீது விவேகமற்ற, நியாயமற்ற முறையில் சேவை வரி சட்டத்தை பயன்படுத்தி சேவை வரி விதித்து இருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். பொது விநியோக முறையில் ஏற்கனவே செலவினத்தை சந்தித்து வரும் மாநில அரசுக்கு இது கூடுதல் சுமையாக இருக்கும்.

மேலும், மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான உணவு பொருள் வழங்குவதை இந்த வரி விதிப்பை பலவீனப்படுத்துவதாக இருக்கும். 1.8.2002, 20.6.2003, 1.8.2004 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட அரசாணைகளில் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் மீது சேவை வரி விதிக்கப்பட்டபோது, ‘‘வேளாண் விளைப்பொருள்’’ என்ற அடிப்படையில் அரிசிக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

2012-ம் ஆண்டு அனைத்து சேவைகளுக்கும் வரி விதிக்கும் வகையில் சேவை வரியில் மாற்றங்கள் செய்யப்பட்டபோது, ‘‘வேளாண் விளைபொருள்’’ என்ற அடிப்படையிலும் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி நிதிச்சட்டம்–2012 பிரிவு 65பி(5)-ன்படி சேவை வரி விலக்கில் இருந்து பொருட்களை குறிப்பாக அரிசியை நீக்கியது.

2012–ம் ஆண்டு அக்டோபரில் மத்திய பண்டகசாலைக் கழகம் வெளியிட்ட விளக்கக் குறிப்பில், நிதிச்சட்டம் 2012 பிரிவு 65பி(5)-ல் அரிசியை வேளாண் விளைப் பொருளாக கருத முடியாது என்று கூறப்பட்டாலும் தாங்கள் அரிசியை வேளாண் விளைப் பொருளாக கருதி, அரிசிக்கு தொடர்ந்து சேவை வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிப்பதாக கூறி இருந்தது . தங்கள் விளக்கம் குறித்து தங்களது நிர்வாக அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டு இருப்பதாக மத்திய பண்டகசாலை கழகம் கூறி இருந்தது.

அதிர்ஷ்டவசமாக மத்திய நிதி மந்திரி, பொது வினியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரம் (தனிப்பொறுப்பு) அமைச்சகத்துக்கு கடந்த 2013–ம் ஆண்டு நவம்பர் மாதம் 8–ந்தேதி அனுப்பிய எண். 354/114/2013–டி.ஆர்.யூ. என்ற கடிதத்தில் அரிசி மற்றும் பருத்தி ஆகியவை சட்டப்பிரிவு 65பி (5)-ன்படி வேளாண் விளைபொருட்கள் பட்டியலில் வராது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து 2013–ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2012–ம் ஆண்டு ஜூலை 1–ந்தேதி முதல் அமலில் உள்ளதாக கூறி அரிசி சேமிப்புக்கு சேவை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

கோதுமையை வேளாண் விளைபொருள் என்று கூறும் மத்திய நிதி மந்திரி, அரிசி மட்டும் வேளாண் விளை பொருள் அல்ல என்று கூறி மிகவும் வினோதமான நிலையை எடுத்து இருக்கிறார். கோதுமையை தவிர்த்து அரிசிக்கு அவர் சேவை வரி விதித்து இருப்பது விவேகமற்றது, நேர்மையற்றது.

நாட்டில் உள்ள சில பகுதி மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நியாயமற்ற முடிவாக இது உள்ளது. குறிப்பாக அரிசியை நிலையான உணவு பொருளாகப் பயன்படுத்தும் தென் மாநில மற்றும் கிழக்கு மாநில மக்களுக்கு எதிராக மத்திய நிதி அமைச்சரின் முடிவு உள்ளது.

மேலும், மத்திய அரசின் இந்த முடிவு வெளிச்சந்தையில் அரிசி விலை உயர வழி வகுத்துவிடும். குறிப்பாக தற்போது உணவு பண வீக்கம் ஏற்கனவே மோசமாக உள்ள நிலையில் அரிசி மீது சேவை வரி விதித்து இருப்பது சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கும்.

2012–ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து கணக்கிட்டு அரிசி மீது சேவை வரி வசூலிப்பது, அரிசியை இருப்பு வைத்திருப்பவர்களுக்கும், அரிசியை சந்தைப்படுத்துபவர்களுக்கும் மிகப்பெரிய சுமையாக மாறியுள்ளது. இதுவரை சேவை வரி இல்லாமல் சொந்த கட்டிடம், அல்லது வேளாண் விளைபொருள் கமிட்டி அல்லது போர்டின் பண்டக சாலையில் இருப்பு வைத்திருப்பவர்களுக்கு சேவை வரி விதிப்பு இல்லாவிட்டாலும் அரிசி சந்தை நிலவரத்தால் பாதிப்பு ஏற்படும்.

மத்திய, மாநில பண்டக சாலை கழகங்களின் குடோன்களில் அரிசி இருப்பு வைக்கப்பட்டிருந்தால், அந்த இருப்பு, பண்டகசாலை மற்றும் கையாளும் கட்டணத்துக்கு சேவை வரி விதிக்கப்படுகிறது. இது பொது வினியோக முறை மூலம் வழங்கப்படும் அரிசிக்கான செலவில் கூடுதல் செலவை ஏற்படுத்தி விடும்.

மேலும், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 அமல்படுத்தப்படும்போதும் செலவை கணிசமாக அதிகரிக்க செய்து விடும்.

அரிசியை வேளாண் விளைபொருள் அல்ல என்று மத்திய நிதி அமைச்சகம் கொடுத்துள்ள விளக்கம் யதார்த்தத்துக்கும், பொது அறிவுக்கும் எதிரானது. நமக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அரிசியை வேளாண் பொருளாக கருதப்படுகிறது.

அரிசிக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு ஏற்கனவே ஒரு தெளிவான நிலையை எடுத்துள்ளது. எனவே, மத்திய அரசு அரிசியை வேளாண் விளைப்பொருளாக கருதாது பொருத்தமானது அல்ல, மக்களக்கு எதிரான நிலை.

எல்லா உணவு தானியங்களிலும் அரிசிக்கு மட்டும் அறிவுப்பூர்வமற்ற, விவேகமற்ற முறையில் அரிசிக்கு மட்டும் சேவை வரி விதித்து மத்திய நிதி அமைச்சகம் நடவடிக்கையை தொடர்ந்துள்ளது. சாமானிய மக்களிடம் இருந்து மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எப்படியெல்லாம் விலகிச் செல்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

எனவே, தாங்கள் இதில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு அரிசியை வேளாண் விளைபொருள் என்று அறிவிக்க வேண்டும். மேலும், அரிசி சேமிப்பு மீதான சேவை வரியை ரத்து செய்ய வேண்டும்.

வசூலித்த வரி பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். இதில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உங்களிடம் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.