தமிழக மீனவர்களை படகுகளுடன் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடிதம்

jjபிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறிஇருப்பதாவது:-

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்று துன்புறுத்தப்படுவது பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. தொடரும் இத்தகைய சம்பவங்களால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களும், அவர்களது குடும்பத்தினரும் சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து வருகிறார்கள்.

தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையே நேரடி பேச்சு வார்த்தை நடத்த உதவி செய்து, அதன் மூலம் நல்லெண்ண சூழ்நிலை உருவாக்கப்பட்ட பிறகும் கூட இந்த நிலை தொடர்கிறது. தமிழக மீனவர்களை குறி வைத்து தாக்கும் போக்கை இன்னமும் இலங்கை கடற் படை கைவிடவில்லை.

சமீபத்தில் 01.02.2014 அன்று 5 எந்திரப் படகுகளில் சென்று மீன் பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்படை கடத்திச் சென்று விட்டது. இது தமிழ்நாட்டில் உள்ள மீனவ சமுதாயத்தினர் அனைவரிடமும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி யுள்ளது.

இலங்கை மீனவப் பிரதிநிதிகளுடன் சுமூகமான பேச்சு வார்த்தை நடத்தி, அதன் மூலம் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் இனி தினமும் எந்த தொந்தரவும் இல்லாமல் மீன் பிடிக்கலாம் என்ற நல்ல தீர்வு வரும் நிலையில் தமிழக மீனவர்கள் கடத்தப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களிடம் அதிர்ச்சி கலந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. 01.02.2014 அன்று தங்களது பாரம்பரியமான இடத்தில் மீன்பிடித்த போதுதான் 19 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கடத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையின் இத்தகைய செயல், நாங்கள் கட்டி எழுப்பிக் கொண்டிருக்கும் நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும் தகர்ப்பதாக உள்ளது. அதோடு தமிழக மீனவர்கள் மத்தியில் இது மிகப்பெரிய குமுறலை எழச் செய்துள்ளது.

இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளால் வேதனை அடைந்துள்ள தமிழக மீனவ சமுதாயத்தினர், இந்திய அரசு தங்களை திறமையாக பாதுகாக்க இயலாத திறனற்ற நிலையில் இருப்பதாகவே கருதுகிறார்கள். மேலும் அமைதி தீர்வுக்கு வழி காண்பதை தடம் புரளச் செய்து சீர்குலைக்கும் இலங்கை கடற்படை முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவாக உள்ளதா என்ற ஆச்சரியத்தை தமிழக மீனவர்களிடம் ஏற்படுத்தி உள்ளது.

29.01.2014 அன்று இலங்கை கடற்படையால் 6 எந்திர படகுகளுடன் கடத்திச் செல்லப்பட்ட 38 மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

எனவே, தாங்கள் இந்த பிரச்சினையில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, தூதரக அளவில் பேச்சு வார்த்தை நடத்தி இலங்கை சிறைகளில் உள்ள 57 தமிழக மீனவர்களையும் உடனே படகுகளுடன் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் உங்களை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கூறியுள்ளார்.

pr040214_081 copy