தனது இளைய மகனுக்கு மூத்த மகனால் ஆபத்து என்றவுடன் பிரதமருக்கு வரிந்து கட்டிக் கொண்டு கடிதம் எழுதச் சொல்லும் கருணாநிதி, பத்திரிகை எரிப்புச் சம்பவம் மற்றும் தா.கிருட்டிணன் கொலை வழக்குகளில் என்ன நிலைப்பாட்டை எடுத்தார்?: தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கேள்வி

jayalalitha-

சட்டப்பேரவையில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா பேசுகையில், “மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து சில குற்றச்சாட்டுகளை எதிர்கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரிவர பராமரிக்கப்படுவது இல்லை, குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று உண்மைக்கு மாறான ஒரு தொடர் பிரச்சாரம் தி.மு.க.வினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்த எனது விளக்கத்தை எடுத்துரைக்க விரும்புகிறேன்.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், மதுரையில் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டது. இந்தக் கொடூரக் காட்சிகள் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாயின. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இது தான் சட்டத்தையும், நீதியையும் நிலைநாட்டிய லட்சணமா? சென்னை சட்டக் கல்லூரி வளாகத்தில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தடுக்க வேண்டிய காவல் துறையின் கைகளை கட்டிப் போட்டது யார்? இது என்ன சட்டத்தை நிலை நாட்டியதன் அடையாளமா?

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற நீதிபதிகள், முதலமைச்சர், காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோர் முன்னிலையில் ஒரு ரவுடிக் கும்பல் வழக்கறிஞர்களை தாக்கியது. அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே? இதற்குப் பெயர் தான் சட்டத்தின் ஆட்சியா? இது போன்ற எண்ணற்ற குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை வெறும் குற்றச்சாட்டுகள் அல்ல – உண்மை சம்பவங்கள்! சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், சட்டத்தின் ஆட்சிக்கு பதிலாக சமூக விரோதிகளுக்கான ஆட்சி தான் நடைபெற்றது.

ஆட்சியில் இருந்த போது தான் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டார் என்றால், ஆட்சியில் இல்லாத போதும் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. மதுரை புறநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் உட்பட ஐந்து பேர் மீது ஒருவர் தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் காவல் துறையிடம் புகார் கொடுத்தார். இதனுடைய உண்மைத் தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறை. ஆனால், இது குறித்து கருணாநிதியே நடவடிக்கை எடுத்து இருக்கிறார்.

இந்தப் பிரச்னை குறித்து 28.01.2014 அன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கருணாநிதி, “கட்சியிலே உள்ள மதுரை மாவட்ட கழகச் செயலாளர் மூர்த்தி மீது பி.சி.ஆர். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு எழுதிக் கொடுத்தவரை, கட்சித் தலைவர் என்ற முறையில் நான் விசாரிப்பதும், கண்டிப்பதும் எப்படிக் குற்றமாகும்?””என்று வினவியுள்ளார். அதாவது, சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டவர் மீது காவல் துறையில் புகார் கொடுப்பதே தவறு என்று கூறி இருக்கிறார். ஆட்சியில் இல்லாத போதே இப்படி என்றால், ஆட்சியில் இருந்த போது சட்டம்-ஒழுங்கு எப்படி நிலைநாட்டப்பட்டு இருக்கும் என்பதை உங்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

மதுரை பத்திரிகை அலுவலக எரிப்புச் சம்பவத்திற்கும், தா.கிருட்டிணன் கொலை வழக்கிற்கும் மூல காரணம் யார் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. மேற்கண்ட இரண்டு சம்பவங்களும் தானாகவே நடந்தது போல், இந்த இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். தற்போது, தன்னுடைய இளைய மகன் மு.க.ஸ்டாலின் வாழ்வு பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரி சொல்லியவற்றை பத்திரிகையாளர்களிடம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதோடு நின்றுவிடாமல், பிரதமருக்கு டி.ஆர்.பாலு மூலம் கடிதம் எழுதச் சொல்லியிருக்கிறார். பாலுவும், 27.1.2014 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், எல்.டி.டி.ஈ., மத அடிப்படைவாதிகள் மற்றும் அரசியல் விரோதிகளால் மு.க.ஸ்டாலினுக்கு ஆபத்து உள்ளது என்று குறிப்பிட்டு, Z PLUS பாதுகாப்பு கொடுக்குமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது என செய்திகள் வெளி வந்துள்ளன.

இலங்கை இனப்படுகொலையில் தமிழ் ஈழ விடுதலை அமைப்பினர் மட்டுமல்லாமல், பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டுவிட்ட நிலையில், எல்.டி.டி.ஈ. அமைப்பிடமிருந்து ஆபத்து என்பது இல்லாத ஒன்றாகும். எந்த ஒரு பெயரும் குறிப்பிடாமல், மத அடிப்படைவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுவும் கற்பனையான ஒன்று. கடைசியாக, பல தரப்பட்ட அரசியல் விரோதிகளிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. யார் யார் அந்த அரசியல் விரோதிகள் என்பது குறிப்பிடப்படவில்லை. கடிதம் எழுதியுள்ள தருணத்தையும், கருணாநிதியின் குடும்பத்தில் நடக்கும் குழப்பத்தையும் ஒப்பிடுகையில் மு.க.அழகிரியின் மூலம் ஆபத்து என்பது மறைமுகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது இளைய மகனுக்கு மூத்த மகனால் ஆபத்து என்றவுடன் பிரதமருக்கு வரிந்து கட்டிக் கொண்டு கடிதம் எழுதச் சொல்லும் கருணாநிதி, பத்திரிகை எரிப்புச் சம்பவம் மற்றும் தா.கிருட்டிணன் கொலை வழக்குகளில் என்ன நிலைப்பாட்டை எடுத்தார்? தனக்கு ஒரு நீதி; தன் குடும்பத்திற்கு ஒரு நீதி; மற்றவர்களுக்கு ஒரு நீதி, என்ற ரீதியில் செயல்படும் கருணாநிதியை தலைவராகக் கொண்டு செயல்படும் தி.மு.க.வினர், சட்டம்-ஒழுங்கு குறித்து பேசுவது நகைப்புக்குரியதாக உள்ளது” என்று கூறினார்.