இலங்கையில் அரசியல் மாற்றத்தை கொண்டு வருவதன் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வு எட்ட முடியும்: யாழ்பாண ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம்

yalnewsyale news1

அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவதன் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வு எட்ட முடியும்  என யாழ்பாண ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம்  தெரிவித்துள்ளார். இன்று (01.02.2014) அமெரிக்க இராஜாங்க  திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி செயலர் நிசா தேசாய் பிஸ்வாலை யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம்  சந்தித்து கலந்துரையாடிய போது இதனைத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பு இன்று (01.02.2014) காலை 10 மணியளவில் யாழ்பாண ஆயர் இல்லத்தில்  இடம் பெற்றது.

ஜெனிவா மாநாட்டில் இலங்கையின் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் அமெரிக்கா அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. எனவே போர்க்குற்ற விசாரணை தொடர்பான விடயங்கள் பற்றிக் கலந்துரையாட இங்கு வந்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் கருத்து தெரிவித்த பிஸ்வால் மற்றும் சிசென் வெளியிலிருந்து போர்க்குற்றங்கள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளுக்கு தீர்வு எட்டப்படுவதைவிட  நாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி நம்பகத்தனமையை ஏற்படுத்துவதையே நாம் எதிர்பார்க்கிறோம். நாட்டில் பல இன மக்கள் மத்தியில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த நீங்கள் பாடுபடவேண்டும் அந்த ஒருமைப்பாட்டின் மூலம் சமாதானத்தை கட்டியெழுப்பலாம் என ஆயருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பில் யாழ்பாண ஆயர் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் நிலவுவது இனப்பிரச்சினை அல்ல அரசியல் பிரச்சினையே என்றார்.

தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டதும் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதும் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளே. இந்த இன அழிப்பினை செய்பவர்களே இதனை விசாரணை செய்வதென்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும்  அரசாங்கம் தாம் விடுதலை புலிகளின் ஆட்சியை அடக்கிவிட்டோம் என்ற பெருமையில் இருக்கிறார்களே தவிர இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனைவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே.சிசனும் கலந்து கொண்டார்.