கொலையும் செய்வாள் பத்தினி: பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற அக்காள் கணவரை கத்தியால் குத்திய ஹரிப்பிரியா!

 மேத்யூ

மாதவரம் பால்பண்ணை டெலிபோன் காலனி முதல் தெருவைச் சேர்ந்த சோபன்ராஜ் என்பவரின் மகன் மேத்யூ பினுராஜ்(32), இவரது மனைவி ஹேமா.

இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஹேமா, மாதவரம் பால்பண்ணையில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வருகிறார்.

மேத்யூ, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஹேமாவின் பெற்றோர் கோபால்-பாக்கியலட்சுமி ஆகியோர் இறந்துவிட்டதால், அவருடைய தங்கை ஹரிப்பிரியா(23) மேத்யூ குடும்பத்தினருடன் கடந்த 2007-ம் ஆண்டு முதல் சேர்ந்து வாழ்ந்து வந்தார். ஹரிப்பிரியா, பெரம்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாமாண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் ஹரிப்பிரியாவுக்கு மேத்யூ பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஹரிப்பிரியா, பெற்றோரை இழந்துவிட்டதால் வேறுவழியின்றி, மேத்யூவின் பாலியல் தொந்தரவை சகித்துக் கொண்டு இருந்துள்ளார். அண்மைக்காலமாக மேத்யூ எல்லையை மீறி, ஹரிப்பிரியாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது குறித்து ஹரிப்பிரியா, எருக்கஞ்சேரியில் வசிக்கும் மேத்யூவின் தந்தை சோபன்ராஜிடம் சில வாரங்களுக்கு முன்பு புகார் செய்துள்ளார். சோபன்ராஜ் மேத்யூவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மேத்யூ, தந்தை சோபன்ராஜியை தாக்கியுள்ளார். இதனால் சோபன்ராஜ் குடும்பத்தினர் மேத்யூவிடம் தொடர்பை துண்டித்துவிட்டனராம்.

இந்த நிலையில் 30.01.2014 வியாழக்கிழமை இரவு மதுபோதையில் மேத்யூ வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு மனைவி ஹேமாவிடம் அவர் தகராறு செய்ததாக தெரிகிறது. இந்த தகராறு நள்ளிரவு வரை நீடித்ததாக கூறப்படுகிறது. 31.01.2014 வெள்ளிக்கிழமை அதிகாலையில் மேத்யூ, ஹேமா வாயில் மதுவை வலுக்கட்டாயமாக ஊற்றி, குடிக்க வைத்துள்ளார். பின்னர் வீட்டுக்கு வெளியே ஹேமாவை தள்ளி கதவைப் பூட்டியுள்ளார்.

பின்னர், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஹரிப்பிரியாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த ஹரிப்பிரியா, அவரிடமிருந்து தப்பியோட     முயற்சித்துள்ளார். அவரிடமிருந்து தப்ப முடியாது என்பதை அறிந்ததும், சமையலறை கத்தியை காட்டி மேத்யூவை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், மேத்யூ தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், அவருடைய தலைப் பகுதியில் ஹரிப்பிரியா கத்தியால் தாக்கியுள்ளார். பின்னர் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த மேத்யூ, சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

இதுகுறித்து ஹேமா அளித்த தகவலின் அடிப்படையில் போலீஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, ஹரிப்பிரியாவையும் கைது செய்தனர்.

ஹரிப்பிரியா மீது இந்திய தண்டனைச் சட்டம் 304-வது பிரிவின் கீழ் கொலை நோக்கமின்றி உயிரிழப்பு ஏற்படுத்தப்பட்ட வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் பலாத்காரத்திலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவே அக்காள் கணவரை ஹரிப்பிரியா கொலை செய்திருப்பதாக காவல்துறை கருதுவதால், நீதிமன்றம் மூலம் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க காவல்துறை முடிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையின்போது பல்வேறு அதிர்ச்சித் தகவல்களும் கிடைத்துள்ளன. மேத்யூவின் தந்தை சோபன்ராஜும், ஹரிப்பிரியாவின் தந்தை கோபாலும் தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர்கள்.

இவர்கள் இருவரும் நண்பர்கள். மேத்யூ, கோபாலின் மூத்த மகள் ஹேமாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதன் பின்னர் கோபால் தம்பதியினர் இறந்துவிட்டதால், ஹேமா வீட்டில் ஹரிப்பிரியா வசித்து வந்துள்ளார். ஆரம்பம் முதலே ஹரிப்பிரியாவுக்கு மேத்யூ பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து ஹரிப்பிரியா தனது சகோதரி ஹேமாவிடம் அவ்வப்போது கூறினாலும் மேத்யூ தனது அணுகுமுறையை மாற்றி கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

எம்.பி.பி.எஸ். படிக்க ஆசைப்பட்டு, தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்த ஹரிப்பிரியாவின் படிப்பை இரண்டு ஆண்டுகள் மேத்யூ நிறுத்தியுள்ளார். பின்னர் சகோதரியின் உதவியுடன் ஹேமா பி.காம். படிப்பில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று தற்பாதுகாப்புக்காகவும், வேறு வழியின்றி ஹரிப்பிரியா மேத்யூவை கத்தியால் குத்தியதாக காவல்துறையால் கருதப்படுகிறது. எனவே, சம்பவம் கொலை நோக்கமின்றி நடந்துள்ளதாக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

மேலும் இந்திய தண்டனைச் சட்டம் 100-ஆவது பிரிவின் 3-ஆவது உட்பிரிவில் தற்பாதுகாப்புக்காகவும், பாலியல் பலாத்காரத்தில் தன்னை காத்துக் கொள்ளவுமே இச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய சென்னை பெருநகர காவல்துறை திட்டமிட்டுள்ளது. இதனால் வழக்கு விசாரணையின்போதே ஹரிப்பிரியா விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

காவல்துறையே, இந்த வழக்கில் இருந்து ஹரிப்பிரியாவை விடுவித்தால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்பதால், நீதிமன்றம் மூலம் அவரை விடுவிக்க நடவடிக்கை எடுப்பட்டு வருவதாக தெரிகிறது.

ஏற்கனவே மதுரை ஊமச்சிக்குளத்தில் கடந்த 2010-ல் இதேபோன்று நடந்த ஒரு சம்பவத்தில் ஒரு பெண்ணும், தாயாரும் காவல்துறையால் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.