காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது: சட்டசபையில் ஜெ.ஜெயலலிதா தனித்தீர்மானம்

jayalalithaa tn.cmசட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அரசின் தனித்தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:–

2009–ஆம் ஆண்டு, இலங்கை உள்நாட்டுப் போர் உச்சக் கட்டத்தில் இருந்த நிலையில் சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி, லட்சக்கணக்கான அப்பாவி இலங்கைத் தமிழர் களை கொன்று குவித்து ஒரு இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் நடத்தியது.

இலங்கை அரசின் இந்த இனப் படுகொலையை ஈவு இரக்கமற்ற இழி செயலை மனிதாபிமானமற்ற தன்மையை, மனிதநேயமற்ற நடவடிக்கையையும், இலங்கை தமிழர்களை அழிக்க இந்திய அரசு ஆயுதங்கள் வழங்கியது மற்றும் பயிற்சிகள் அளித்த நடவடிக்கையையும் நான் ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வந்திருக்கிறேன்.

இலங்கை அரசின், அராஜகச் செயலைக் கண்டித்து தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், மாணவமாணவியர், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், கலைத்துறையினர் என அனைத்துத் தரப்பினரும் தங்கள் உணர்வுகளை வெளிப் படுத்தும் வகையில், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இலங்கை நாட்டிற்கு எதிராக உலகம் முழுவதிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட குழு தனது ஆய்வில், பரவலாக குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்தது; மனிதர்கள் வாழும் இடங்களின் மீதும், மருத்துவமனைகள் மீதும் குண்டுகளை வீசியது; மனிதா பிமான முறையில், செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது; உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்படக் கூடிய வர்கள் உட்பட இந்தச் சண்டையில் பலியானவர்கள் மற்றும் எஞ்சியுள்ளவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது; இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது உள்பட பல்வேறு கடுமையான குற்றங்களை இலங்கை அரசு நிகழ்த்தியுள்ளதாக தெரிவித்தது.

இந்தச் சூழ்நிலையில் 2011 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்–அமைச்சராக பொறுப்பேற்ற நான், அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது ஈவு இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும், தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தினை 8.6.2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முன்மொழிந்தேன்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் இந்த மாமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்தத் தீர்மானத்தின் மீது இது நாள் வரை இந்திய அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கவும், சிங்களர்கள் தமிழ்நாட்டில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளவும், மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு இலங்கை ராணுவ வீரர்களுக்கு, இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது என்று நான் பாரதப் பிரதமருக்கு கடிதங்கள் எழுதினேன்.

இதன் விளைவாக, தமிழ்நாட்டில் இலங்கை ராணுவ வீரர்கள் பயிற்சி பெறுவது ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும், இலங்கை அரசு அங்கு வாழும் தமிழர்களுக்குத் தேவையான மறுவாழ்வு பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என்றும், தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக கருதப்படுவது தொடர்கிறது என்றும் தகவல்கள் வரப் பெற்றன.

இது மட்டுமல்லாமல் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் குறித்து புதிய ஆதாரங்களை ஊடகங்கள் வெளியிட்டன. இதன் காரணமாக ஒட்டுமொத்த தமிழ் நாடே கொதித்தது.

இதனைத் தொடர்ந்து, 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கை நாட்டில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டினை வேறு நாட்டிற்கு மாற்றுவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்றும், இலங்கையில் நடை பெறும் இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றும் தெரிவித்து 25.3.2013 அன்றே கடிதம் வாயிலாக, பாரதப் பிரதமரை நான் கேட்டுக் கொண்டேன்.

இது மட்டுமல்லாமல் 27.3.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், இலங்கை நாட்டை “நட்பு நாடு” என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும், இந்த சர்வதேச விசாரணையின் அடிப்ப டையில் போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும், தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும், ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு “தனி ஈழம்” குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னும் அரசினர் தீர்மானத்தினை நான் முன்மொழிந்தேன்.

அது இந்த மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மீதும் மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில், தமிழக மக்களின் உணர்வுகள் உட்பட, அனைத்து காரணிகளையும் பரிசீலித்து, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்து கொள்வது குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று பாரதப் பிரதமர் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இந்த காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக மக்கள் வலியுறுத்தி வரும் சூழ்நிலையில், பாரதப் பிரதமர் தன்னுடைய பங்கேற்பு பற்றி மட்டும் கருத்து தெரிவித்துள்ளது தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

காமன்வெல்த் நாடுகளின் தலைவரான இரண்டாம் ராணி எலிசபெத் அவர்களால் காமன்வெல்த் நாளான 11.3.2013 அன்று கையெழுத்திடப்பட்ட காமன்வெல்த் சாசனத்தில், மனித உரிமைகள் என்ற தலைப்பின் கீழ், மனித உரிமைகள் குறித்த பொதுவான பிரகடனம், இதர தொடர்புடைய மனித உரிமைகள் குறித்த உடன் பாடுகள் மற்றும் இதர சர்வதேச ஆவணங்கள் ஆகியவற்றை பின்பற்றுவதில் உறுதியாக இருக்கிறோம் என்றும், அமைதி, நியாயம் மற்றும் நிலையான சமூகங்கள் ஆகியவற்றின் அடிப்படையாக விளங்கும் வளர்ச்சி உரிமை உள்பட சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார சம உரிமைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் வழிவகுக்கும் சம உரிமை மற்றும், கண்ணியத்தை எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் வழங்கவும் உறுதி பூணுகிறோம் என்றும், இந்த உரிமைகள் அனைத்தும் பொதுவானவை, பிரிக்க முடியாதவை, ஒன்றுக் கொன்று சார்புடையவை, ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றும், இதில் சிலவற்றை மட்டும் தெரிந்தெடுத்து செயல்படுத்த முடியாது என்றும், காமன்வெல்த் சானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாலினம், இனம், நிறம், மதம், அரசியல் நம்பிக்கை, அல்லது வேறு காரணங்களுக்காக ஏற்படுத்தப்படும் வேறுபாடுகளை கடுமையாக எதிர்க்கிறோம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்தக் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முற்றிலும் முரணாக இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது.

காமன்வெல்த் நாடுகளின் முக்கியமான கொள்கைகளையும், கோட்பாடுகளையும் நிலைநிறுத்த முன்வராத இலங்கை நாட்டில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கனடா நாட்டு பிரதமர் அறிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் காமன்வெல்த் கூட்டமைப்பு தொடர்ந்து உகந்த வகையில் திகழ வேண்டுமென்றால் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித கண்ணியத்தை மதித்தல் போன்ற அடிப்படைக் கொள்கைகளின் அஸ்திவாரத்தில் அமைக்கப்பட்ட காமல் வெல்த் அமைப்பு அவற்றை நிலைநிறுத்த வேண்டும் என்று கனடா நம்புகிறது.

கனடா நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்படும் காமன்வெல்த் நாடுகளின் இந்த முக்கியக் கொள்கை களை நிலைநிறுத்த இலங்கை அரசு தவறிவிட்டதால், கனடா நாட்டு பிரதமர் என்ற முறையில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்து இருக்கிறார்.

அவருக்குப் பதிலாக வெளியுறவுத் துறை அமைச்சரின் நாடாளுமன்றச் செயலர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் மிகக் குறைவாக வசிக்கும் கனடா நாடே இது போன்றதொரு முடிவை எடுத்து பெயரளவில் ஒருவரை அனுப்பவுள்ள சூழ்நிலையில், எட்டு கோடி தமிழர்கள் வசிக்கும் இந்தியா இந்த மாநாட்டில் பெயரளவிலும் கலந்து கொள்ளாது என்னும் தீர்க்கமான முடிவை இன்னமும் எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது. தமிழர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு சிறிதும் மதிப்பளிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்றும், பெயரளவிற்குக் கூட ஒருவரும் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என்றும் தெரிவித்து, இது போன்ற நடவடிக்கை இலங்கைத் தமிழர்கள் மீது நியாயமான அணுகு முறையை இலங்கை அரசு எடுக்க வழிவகுக்கும் என்றும் கோடிட்டுக்காட்டி ஒரு விரிவான கடிதத்தினை நான் பாரதப் பிரதமருக்கு 17.10.2013 அன்று எழுதியுள்ளேன்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இதே கோரிக்கையினை வலியுறுத்தி வருகின்றன. எனினும், மத்திய அரசு இந்தப் பிரச்சனை தொடர்பாக ஒரு திடமான, தீர்க்கமான முடிவை இன்னமும் எடுக்க வில்லை.

ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையிலும், தமிழக மக்களின் உணர்வுகளைத், தெரிவிக்கும் வகையிலும், கீழ்க்காணும் தீர்மானத்தினை நான் முன்மொழிகிறேன்.

“தமிழக மக்களின் ஒருமித்த கருத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை நாட்டில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்றும்; பெயரளவிற்குக் கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்றும்; இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும்; இலங்கை தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்னும் தீர்மானத்தினை நான் முன்மொழிகிறேன்.

என்னால் முன்மொழியப்பட்ட இந்தத் தீர்மானத்தினை ஒரு மனதாக நிறைவேற்றித் தருமாறு பேரவைத் தலைவர் வாயிலாக உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அனைத்து கட்சி உறுப்பினர்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அதன்பிறகு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கருத்து தெரிவிக்கலாம் என்று சபாநாயகர் கூறினார்.

இதையடுத்து முதல்– அமைச்சர் ஜெயலலிதா எழுந்து நான் ஏற்கனவே இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை முன்மொழிந்த போது அனைத்து கருத்துக்களையும் தெரிவித்து விட்டேன். எனவே இந்த தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றி தருமாறு கேட்டு கொள்கிறேன் என்றார்.

அதன் பின் தீர்மானத்தை சபாநாயகர் குரல் வாக்கெடுப்புக்கு விட்டார். இதில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.