தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் பிரச்சனைக்கு சென்னையில் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் : பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம்

tn-cmfதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–

தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குவதையும், கைது செய்வதையும் தடுக்கும் வகையில் தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே பேச்சு வார்த்தை நடந்த வேண்டும் என்பதற்காக நான் தங்களுக்கு கடிதம் எழுகிறேன்.

கடந்த சில வருடங்களாக தமிழக மீனவர்களை தாக்குவது மற்றும் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பாக்ஜலசந்தி தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதியாகும். ஆனால் அதை தடுக்குவம் வகையில் இந்த தாக்குதல் நடந்து வருகின்றன.

இந்த பிரச்சனைக்கு காரணமே 1974–ம் ஆண்டு தவறான ஆலோசனை மூலம் கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்தது தான்.

இதனால் இன்று வரை இந்த பிரச்சினை நீடித்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்ட மீனவர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி அவர்களது வாழ்வாதாரத்தையே இழந்துள்ளனர்.

எனவே தமிழக அரசு சார்பில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். கச்சத்தீவு இந்தியாவுக்கு திரும்ப பெற உத்தரவிட வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமான பகுதியாகும். பூகோள ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் அது நமக்கு சொந்தமானதாகும்.

தற்போது இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டின் கீழ் உள்ளது. கடந்த 2½ ஆண்டுகளில் 36 தடவை இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை தாக்கியுள்ளது. 254 மீனவர்களை கைது செய்யப்பட்டு இருக்கின்றன. பல்வேறு அமைப்புகள் மூலம் அவர்களை விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் தோல்வியே ஏற்பட்டு இருக்கிறது. தற்போதும் 97 தமிழக மீனவர்கள் இலங்கை ஜெயிலில் பல மாதங்களாக வாடிக் கொண்டிருக்கிறார்கள்.

2011 மே மாததத்தில் இருந்து இதுவரை 26 தடவை உங்களுக்கு இது சம்பந்தமாக நான் கடிதம் எழுதி இருக்கிறேன். மீனவர்கள் விரைவில் விடுதலை செய்ய நான் உங்களை வற்புறுத்தி இருக்கிறேன். ஆனால் இதில் திருப்தி ஏற்படும் வகையில் நடவடிக்கை இல்லை.

நான் உங்களுக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் கூட 19–09–2013 அன்று 19 மீனவர்களை கைது செய்து இருக்கிறார்கள். இலங்கையில் 2009–ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பிறகு இது போன்ற நடவடிக்கைககள் மிகவும் அதிகரித்து உள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 2 நாடுகளுக்கிடையே மீனவர்கள் மத்தியில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

2010–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்னையில் முதல் கட்ட பேச்சு வார்த்தை நடந்தது. 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் கொழும்பில் இருதரப்பினருக்கிடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் பேச்சு வார்த்தையில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என இதுவரையில் எங்களுக்கு தகவல் இல்லை. இந்த பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் நேரத்திலேயே 57 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. 36 தமிழக மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

இப்போதும் தொடர்ந்து தாக்குதலும், கைது நடவடிக்கையும் நீடித்து கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் தமிழக– இலங்கை மீனவர்கள் மத்தியில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று எங்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதில் எடுக்கப்படும் முடிவை வைத்தே இது போன்ற தாக்குதல்களை தடுக்க முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர். தினமும் நடந்து வரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று நினைக்கிறார்கள்.

எனவே இந்த இரு தரப்புபேச்சு வார்த்தைக்கான ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த பேச்சு வார்த்தை சென்னையில் நடைபெற வேண்டும். பேச்சு வார்த்தையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கடத்தி செல்லப்படுவது, நீண்ட நாட்களாக ஜெயிலில் அடைப்பது போன்றவற்றை தீர்க்கும் வகையில் விவாதிக்க வேண்டும். பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதியில் தொடர்ந்து மீன் பிடிக்க உரிமை அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். கச்சத்தீவு பிரச்சினை கோர்ட்டில் இருப்பதால் அது பற்றி இதில் விவாதிக்க கூடாது. அதில் எடுக்கப்படும் தீர்மானங்கள் தமிழக அரசின் ஒப்புதலை பெறவேண்டும்.

இந்த பேச்சு வார்த்தையை டிசம்பர் மாதம் சென்னையில் நடத்தலாம். இது சம்பந்தமாக நீங்கள் தலையிட்டு சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் உரிய அனுமதி பெற வேண்டும். பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளும் இலங்கை மீனவர்கள் பட்டியலை முன்கூட்டியே தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

pr220913_5101 copypr220913_510-12 copypr220913_510-23 copypr220913_510-34 copy