இன்று உலகம் இந்தியாவை சமமான கூட்டு நாடாக பார்க்கிறது : டாக்டர் ஜிதேந்திர சிங்

அனைத்து வகையான சர்வதேச ஒத்துழைப்பிலும் இந்தியாவை சமமான கூட்டு நாடாக  உலகம் இன்று பார்க்கிறது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், விண்வெளி மற்றும் அணுசக்தி துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உலகின் மூத்த அரசுத் தலைவராக உள்ளார், மேலும் ஒவ்வொரு அரசுத் தலைவர்களும் மரியாதையுடன் பார்க்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

பிரபல  பத்திரிகை ஒன்றுக்கு டாக்டர் ஜிதேந்திர சிங் அளித்த பிரத்யேக பேட்டியில், “நாம் இப்போது பெரும்பாலான நாடுகளுடன் ஒத்துழைப்பைக் கொண்டுள்ளோம். ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பின் சிறந்த பகுதி என்னவென்றால், நாம் இனி  சமமான கூட்டு நாடாக  இருக்கிறோம், பல வழிகளில், சமமானவர்கள். எடுத்துக்காட்டாக, விண்வெளித் துறையில், நாம் நமது  சேவைகளை அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு வழங்குகிறோம்… நாம் ஏற்கனவே 170 மில்லியன் டாலருக்கும் அதிகமாகவும், 250 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாகவும் சம்பாதித்துள்ளோம். நாங்கள் இப்போது 8 பில்லியன் டாலர் (ரூ.66,000 கோடி) விண்வெளி வர்த்தகம் செய்கிறோம். ஆனால் நாம் வளர்ந்து வரும் வேகத்தில், இந்தியா 2040 ஆம் ஆண்டில் 40 பில்லியன் டாலராக (ரூ.3.3 லட்சம் கோடி) உயரக்கூடும், அதே நேரத்தில் சமீபத்திய சர்வதேச அறிக்கையான ஏ.டி.எல் அறிக்கை, நாம் 100 பில்லியன் டாலர் வரை கூட செல்லக்கூடும் என்று கூறுகிறது, “என்று அவர் கூறினார்.

உலகெங்கிலும், இனி முழு வளர்ச்சியும் பெரும்பாலும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார், பிரதமர் மோடியின் சமீபத்திய அமெரிக்க பயணத்தின் போது, பெரும்பாலான இருதரப்பு ஒப்பந்தங்கள் அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதில் இருந்து இது தெளிவாகிறது.

இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணத் திட்டமான ‘ககன்யான்’ இஸ்ரோவின் அடுத்த பெரிய திட்டமாகும். “இஸ்ரோவின் மிகவும் லட்சியமான நோக்கத்தை நிறைவேற்ற நாடு முழுவதும் உள்ள அதன் பல்வேறு ஆய்வகங்களில் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன: மூன்று இந்திய விண்வெளி வீரர்களை உள்நாட்டிலேயே ‘மனிதர்களை ஏற்றிச் செல்லும் தகுதி வாய்ந்த’ ராக்கெட் லாஞ்சர் மற்றும் குழு தொகுதியை உருவாக்கி அவர்களை விண்வெளிக்கு பறக்கவிட்டு பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வர வேண்டும்” என்று டாக்டர் ஜிதேந்திர சிங்  கூறினார்.

இந்திய விமானப்படை விமானிகள் 3 பேர் ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் விண்ணில் ஏவப்பட்டு பின்னர் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் வாழ்வதற்காக கடுமையான பயிற்சி பெற்று வருகின்றனர்.

திவாஹர்

Leave a Reply