மத்திய சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், வனத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் தேசிய வனவிலங்கு வாரியத்தின் 92-வது நிலைக்குழு கூட்டம் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. ‘வாழ்விடங்களை இணைத்தல், செழிப்பான வனவிலங்குகள்’ என்ற கருப்பொருளில் கொண்டாடப்பட்ட வனவிலங்கு வாரம் 2026 குறித்த அறிக்கையை நிலைக்குழு ஆய்வு செய்தது. பக்சாவில் புலிகள் மறுஅறிமுகம், ராஜஸ்தானில் கானமயில்கள் விடுவிப்பு, சிவிங்கிப்புலிகள் திட்டத்தின் 3-வது கட்ட விரிவாக்கம் ஆகியவற்றை அமைச்சர் எடுத்துரைத்தார்.
வனவிலங்கு வாரத்தையொட்டி தேர்ந்தெடுக்கப்பட்ட விருதாளர்களை அமைச்சர் கௌரவித்தார். வனவிலங்குகள் பாதுகாப்பு பிரிவில் மறைந்த பனோத் நவீன், ஹுகாய் ஹெச் ஜிமோ, தமிழ்நாட்டைச் சேர்ந்த வி குமரேசன் ஆகியோருக்கும், கண்காணிப்பு பிரிவில் உமேஷ் பாரத் கல்சர்பே, அஸ்வின்சின் கிரித்சின் ஜடேஜா, பஹ்ரைச் மனித-வனவிலங்கு மோதல் மேலாண்மைக் குழுவிற்கும், சமூகப் பாதுகாப்பு பிரிவில் குஜராத்தின் ஸ்ரீ மகாவீர் மச்சிமார் கூட்டுறவு சங்கம், தமிழ்நாட்டின் சிறுமலை பொன்னுருவி சூழலியல் சுற்றுலா மேலாண்மைக் குழுவிற்கும் விருதுகள் வழங்கப்பட்டன. அசாமின் நமேரி புலிகள் காப்பகத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
கடல்சார் பாதுகாப்பு என்ற கருப்பொருளில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாதுகாக்கப்பட்ட கடல்சார் பகுதிகள், கடல் ஆமைகள், கடல் பசுக்கள் மீட்பு குறித்த அறிக்கைகள், சிறிய வகை காட்டுப் பூனைகள் குறித்த கையேடு ஆகியவை வெளியிடப்பட்டன. மேலும், சாலைகள், பாதுகாப்புக் கட்டமைப்புகள், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட 133 வளர்ச்சித் திட்டங்களுக்கான வனவிலங்கு வாரியத்தின் அனுமதிக்கான முன்மொழிவுகள் குறித்து நிலைக்குழு பரிசீலித்தது.
திவாஹர்
