குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், தாதரா – நகர் ஹவேலி, டாமன்- டையூ யூனியன் பிரதேசத்துக்கு மேற்கொண்ட தமது முதல் பயணத்தின்போது, இன்று (11.09.2026) சில்வாசாவில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரசு கல்லூரியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், யூனியன் பிரதேச நிர்வாகி திரு பிரஃபுல் படேல், பல்வேறு கல்லூரிகளின் மாணவர்கள், தமிழ்ச் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் அவர், பிரதமரின் விஸ்வகர்மா திட்டப் பயனாளிகளுக்குக் கருவித் தொகுப்புகளையும், யூனியன் பிரதேசத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமனச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், புதுமையான ஆளுகையும் மக்களின் பங்களிப்பும் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தி, வளர்ச்சியை அதிகரிக்கும் என்பதற்கு இந்த யூனியன் பிரதேசம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலும், மக்களின் தீவிரப் பங்களிப்புடனும் இந்த யூனியன் பிரதேச நிர்வாகி திரு பிரஃபுல் படேலின் தொடர்ச்சியான முயற்சிகளாலும் கடந்த பத்து ஆண்டுகளில் எட்டப்பட்ட முன்னேற்றத்தை அவர் பாராட்டினார்.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்த யூனியன் பிரதேசத்தில் ₹13,000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் 450-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.
சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் இந்த யூனியன் பிரதேசம் அடைந்துள்ள முன்னேற்றத்தையும் அவர் எடுத்துரைத்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இப்பகுதியின் வளர்ச்சிக்குப் பங்களித்து, நல்லிணக்கத்துடன் ஒன்றாக வாழ்ந்து வருவதாக திரு சி.பி. ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
எம்.பிரபாகரன்
