நாடு முழுவதும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகளில், சுமார் 740 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2026 செப்டம்பர் 8 அன்று ராய்ப்பூர் அருகே 2 லாரிகளை சோதனை செய்ததில், 375.95 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக, ஆகஸ்ட் 26 அன்று ராய்ப்பூரில் 124 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பாட்னா அருகே செப்டம்பர் 5-6 தேதிகளில் ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 140.5 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. பஞ்சாபின் லூதியானாவில் காரின் அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 69 கிலோ போதைப்பொருளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
செப்டம்பர் 3 அன்று கோரக்பூர் ரயில் நிலையத்தில், அமர்நாத் விரைவு ரயிலில் நேபாளத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 5 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர். வியட்நாம், தாய்லாந்திலிருந்து ஹைதராபாத், பெங்களூரு விமான நிலையங்களுக்கு வந்த பயணிகளிடமிருந்து 24.6 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
திவாஹர்
