மேலும் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்
ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 7 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்ததும் அவர்களின் விசைப்படகை பறிமுதல் செய்ததும் கண்டிக்கத்தக்கது.
நேற்று அதிகாலையில் கச்சத்தீவு நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது ஐந்து ரோந்து படகில் வந்த இலங்கைக் கடற்படையினர், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் மீட்க தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைப்பதும் நீடிக்கிறது.
இந்நிலை மாற வேண்டும். இதற்காக மத்திய அரசு இலங்கை அரசிடம் கண்டிப்போடு பேசி இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும்.
மேலும் மத்திய அரசு தற்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்களையும், விசைப்படகையும் மீட்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்
