சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் போன்ற சவால்களை எதிர்கொள்வதில் பிம்ஸ்டெக் ஒப்பந்தத்தை முழுமையாகச் செயல்படுத்த முடிவு!-மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில், பிம்ஸ்டெக் உள்துறை அமைச்சர்களின் முதல் கூட்டம் புதுதில்லியில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், பிம்ஸ்டெக் உள்துறை அமைச்சர்களின் முதல் கூட்டத்தை நடத்துவதில் இந்தியா பெருமிதம் கொள்வதாகக் கூறினார்.

பிராந்திய ஒருங்கிணைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு , கூட்டுப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு பிம்ஸ்டெக் ஒரு முக்கிய தளமாக உருவெடுத்துள்ளது  என்று அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா உலகின் நட்பு நாடு என்ற உணர்வுடன் முன்னேற்றம் கண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், அமைதி, நலவாழ்வு, மனித நலன் ஆகியவற்றில், இந்தியா எப்போதும் உறுதியான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருவதாக  அவர்  தெரிவித்தார்.

2025 ஏப்ரல் 4 அன்று பாங்காக்கில் நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையை திரு அமித் ஷா நினைவு கூர்ந்தார்.  பிம்ஸ்டெக் என்பது பிராந்திய அமைப்பாகவும், உள்ளடக்கிய வளர்ச்சி, பாதுகாப்பிற்கான முன்மாதிரியாகவும் திகழ்கிறது என்று பிரதமர் கூறியிருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

இந்தத் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மக்களின் பாதுகாப்பையும், அரசு அமைப்புகளின் திறன்களையும் வலுப்படுத்தும் நடைமுறைகளில் மாற்றத்தை உருவாக்குவது நம் அனைவரின் பொறுப்பு என்று திரு அமித் ஷா கூறினார்.

வங்கக்கடல் பகுதியில் பிராந்திய பாதுகாப்பு, நம்பிக்கை, ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை இக்கூட்டம் மீண்டும் உறுதிப்படுத்தியது.

Leave a Reply