வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI), வங்கதேசத்தில் இருந்து நடைபெறும் எல்லை தாண்டிய தங்கக் கடத்தலுக்கு எதிரான தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, கிழக்கு பிராந்தியத்தில் 2026 அக்டோபர் 08-09 தேதிகளில் நடத்தப்பட்ட புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளில், ரூ. 11.50 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள, வெளிநாட்டைச் சேர்ந்த சுமார் 7.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது . எல்லைப் பகுதிகளில் இருந்து கொல்கத்தாவிற்கு கடத்தப்பட்ட தங்கத்தைக் கொண்டு செல்ல சாலை மற்றும் ரயில் பாதைகள் பயன்படுத்தப்பட்டதை இந்த நடவடிக்கைகள் அம்பலப்படுத்தின. இதன் விளைவாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
கொல்கத்தா டிஆர்ஐ நடத்திய நடவடிக்கைகளின் போது தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
டான்குனி சுங்கச்சாவடியில், டி.ஆர்.ஐ அதிகாரிகள் ஒரு நான்கு சக்கர வாகனத்தை வழிமறித்தனர். வங்கதேச எல்லையருகே உள்ள பன்பூரிலிருந்து கொல்கத்தாவை நோக்கி, நான்கு நபர்களை ஏற்றிச் சென்ற அந்த வாகனம் பயணித்துக் கொண்டிருந்தது. வாகனத்தையும் அதில் இருந்தவர்களையும் சோதனையிட்டதில் , சுமார் 6.8 கிலோ எடையும் ஏறத்தாழ ரூ . 10 கோடி மதிப்பும் கொண்ட 50 தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட சில தங்கக் கட்டிகளில் வெளிநாட்டு முத்திரைகள் இருந்தன. தங்கத்தை சட்டப்பூர்வமாக வைத்திருப்பதை உறுதிப்படுத்தும் எந்தவொரு முறையான ஆவணங்களையும் வாகனத்தில் இருந்தவர்கள் சமர்ப்பிக்கத் தவறியதோடு, வங்கதேசம் வழியாக வெளிநாட்டுத் தங்கத்தை இந்தியாவிற்குள் கடத்தியதில் தங்களுக்கு இருந்த தொடர்பையும் தங்களது வாக்குமூலங்களில் ஒப்புக்கொண்டனர். குறிப்பிடத்தக்க வகையில், பன்பூர் எல்லைப் பகுதியில் செயல்பட்டு வந்த கும்பலின் முக்கிய சூத்திரதாரி, கைது செய்யப்பட்ட நான்கு நபர்களில் ஒருவராக இருந்தார்.
அதே நாளில், மேற்கு வங்க மாநிலத்தில், மால்டா டவுன் ரயில் நிலையம் மற்றும் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையம் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் ரயில்களில் இருந்து இறங்கிய பயணிகளை டிஆர்ஐ குழுக்கள் இடைமறித்து, அவர்களிடமிருந்து சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள, சுமார் 1 கிலோ வெளிநாட்டுத் தங்கத்தைப் பறிமுதல் செய்தன. சட்டப்பூர்வமாகத் தங்கம் வாங்கியதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை அவர்களால் சமர்ப்பிக்க முடியாததால், அந்த இரண்டு பயணிகளும் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வளையல்கள் மற்றும் தங்கக் கட்டிகள் வடிவில் இருந்ததும், திரிபுராவில் இந்திய-வங்காளதேச எல்லையைக் கடந்து கடத்தப்பட்ட தங்கத்திலிருந்து தயாரிக்கப்பட்டது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த நடவடிக்கைகள், கடத்தப்பட்ட தங்கத்தின் போக்குவரத்திற்காக, வங்கதேசத்தின் எல்லைப் பகுதிகளும், வடகிழக்கை கொல்கத்தா போன்ற முக்கிய சந்தைகளுடன் இணைக்கும் சாலை மற்றும் ரயில் பாதைகளும் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. புலனாய்வு அடிப்படையிலான அமலாக்கம் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல் வலையமைப்புகளைத் தகர்ப்பதில் டி.ஆர்.ஐ உறுதியாக உள்ளது.
திவாஹர்
