பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இன்று (2026 அக்டோபர் 10) ஜோத்பூர் விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற தரங் சக்தி 2026 பயிற்சியின் இரண்டாவது பதிப்பில் உரையாற்றினார். இந்திய விமானப்படையால் 2026 செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 12 வரை நடத்தப்படும் இந்த பன்னாட்டு விமானப் பயிற்சியில், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பிரான்ஸ், ஜெர்மனி, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா உள்ளிட்ட ஏழு நட்பு வெளிநாடுகளின் விமானப்படைகளும், 32 பார்வையாளர் நாடுகளும் பங்கேற்றுள்ளன.
தொழில்முறைப் புரிதலையும் செயல்பாட்டு ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதில் இந்த நாடுகளின் பங்களிப்பை திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார். நவீன கால போர் சவால்களை எதிர்கொள்ள, பாதுகாப்புத் துறையில் தற்சார்பு, தொழில்நுட்பப் புத்தாக்கம், சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
நவீனப் போர்முறையானது, தரை, கடல், வான் ஆகிய பாரம்பரியக் களங்களைத் தாண்டி, விண்வெளி, இணையம், மின்காந்த அலைவரிசை, தகவல் களம் ஆகியவற்றை உள்ளடக்கி ஒரு ஆழமான மாற்றத்திற்கு உள்ளாகி வருவதாகக் குறிப்பிட்டார். தற்கால ராணுவ நடவடிக்கைகளில் ஆளில்லா தளவாடங்கள், ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு, மின்னணுப் போர்முறை, நீண்ட தூரம் துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்கள் ஆகியவற்றின் செல்வாக்கு அதிகரித்து வருவதையும் அவர் எடுத்துரைத்தார்.
முப்படைகளின் தளபதி ஜெனரல் என் எஸ் ராஜா சுப்ரமணி, விமானப்படைத் தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ பி சிங், கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன், பிற முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
திவாஹர்
