அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறைகளின் மத்திய இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுக் குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தி மொழியின் பயன்பாடு திணிக்கப்படுவது போல் தோற்றமளிப்பதை விட, அம்மொழிக்கு அதிக வாய்ப்புகளையும் மதிப்பையும் உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டே அம்மொழியின் மேம்பாடு அமைய வேண்டும் என்று இன்று வலியுறுத்தினார். பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் இந்தி ஆலோசனைக் குழுவின் மூன்றாவது கூட்டத்தில் உரையாற்றிய அவர், அம்மொழி அறிவு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கு வாய்ப்புகளை உருவாக்கும்போது, இந்தி பயன்பாடு இயல்பாகவே அதிகரிக்கும் என்று கூறினார். இந்நிகழ்வில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (DoPT) கௌஷல் பத்திரமும் தொடங்கப்பட்டது.
இந்தி ஆலோசனைக் குழு உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவற்றைச் செயல்படுத்துவதற்குத் துறை தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். துறையின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட ஆலோசனைகள், உரிய மட்டத்தில் பரிசீலிக்கப்படுவதற்காக, சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.
திறன் மேம்பாட்டு அமைச்சகத்தால் நடத்தப்படும் போட்டிகளில் மொழித் தேர்வுகள் தொடர்பான ஒரு பரிந்துரையைக் குறிப்பிட்ட அமைச்சர், அத்தகைய தேர்வுகள் சிறிய நகரங்கள், மாநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு இந்த முயற்சிகளை மேலும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்ற உதவும் என்று கூறினார். பொருத்தமான இடங்களில் தகுந்த வாய்மொழிப் பகுதிகளை உள்ளடக்கிய மொழித் தேர்வுகள், இதுபோன்ற முயற்சிகளை மேலும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றும் என்றும், இந்தப் பரிந்துரையை சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்குத் தெரிவிக்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
திவாஹர்
