பிரமோஸ் ஏவுகணைகளை மேம்படுத்த மத்திய பாதுகாப்புதுறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், ரூ.661 கோடி மதிப்பில், பிரமோஸ் ஏவுகணையின் கட்டுபாட்டு அமைப்பு, ஏவுகணைகளை செலுத்த பயன்படும் கருவிகள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மத்திய பாதுகாப்பு அமைச்சகம், தனியார் நிறுவனமான பிரமோஸ் ஏரோஸ்பேஸ் இடையே கையெழுத்தானது. புதுதில்லியில் 2026 அக்டோபர் 6-ம் தேதி பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ்குமார் சிங் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், சிறு, குறு நிறுவனங்கள் பயன்பெறும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன்மூலம் 3 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் ராணுவம், கடற்படையின் பாதுகாப்பு மேம்படும். இலக்கை துல்லியமாகவும் அதிவேகமாகவும் சென்று தாக்கக் கூடிய சிறப்பை பெற்றது பிரமோஸ் ஏவுகணை. இந்திய கடற்படையில் முக்கியத்துவம் வாய்ந்த பிரமோஸ் ஏவுகணையை மேம்படுத்தும் வகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எஸ்.சதிஸ் சர்மா
