பாதுகாப்பான கடற்பகுதி நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதுடன் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான நடவடிக்கைகளை வலுப்படுத்த உதவிடும்!-மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

நாட்டின் கடற்பகுதிகளில் பாதுகாப்பு அம்சங்களை வலுவடையச் செய்வதன் மூலம் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதுடன் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை எட்டுவதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்த முடியும் என்று பாதுகாப்புத் துறை அமைசர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

புதுதில்லியல் நௌசேனா மாளிகையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்திய கடற்படை தளபதிகளின் மாநாட்டில் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் பிற நாடுகளுடன் நட்புறவை வளர்ப்பதுடன் நம்பகத்தன்மை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.

இந்தியப்பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பை வலுப்படுத்துவதுடன் சிக்கலான தருணங்களில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக கடற்படையின் வலிமையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.

கடற்படையை நவீனமயமாக்குவதில் மத்திய அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். கடற்பகுதிகளில் உள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும் எதிர்கால சவால்களை சமாளிப்பதற்கும் ஏதுவாக வலிமையான கடற்படையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பிற நாடுகளுடனான வர்த்தகம் உள்ளிட்ட விநியோக நடைமுறைகளை உறுதி செய்யும் வகையில் கடல் வழிப்பாதையின் பாதுகாப்பை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரம், எரிசக்தி விநியோகம் மேம்படும் என்று திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

நடப்பாண்டில் 18 போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் இதன் காரணமாக இந்தாண்டு இந்திய கடற்படைக்கு வரலாற்றுச் சிறப்பமிக்க ஆண்டாக இருக்கும் என்று அவர் கூறினார்.

கடற்படையில் பெண்களுக்கு வாய்ப்பளிப்பதற்கான முன் முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களில் பெண் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

மாறிவரும் புவிசார் சூழலுக்கு இடையே இந்திய கடற்படையின் திறனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

Leave a Reply