உணவு உற்பத்தியில் உலகின் மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்யும் வகையில் வேளாண் குழு அமைக்கப்படவேண்டும்!- மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் அழைப்பு.

நாட்டின் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்யவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்று மத்திய வேளாண அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் வலியுறுத்தியுள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்று வரும் வேளாண் மாநாட்டின் இரண்டாம் நாளில் பல்வேறு மாநிலங்களின் வேளாண் அமைச்சர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார்.

உணவு உற்பத்தியில் உலகின் மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்யும் வகையில் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

உலக அளவில் பல்வேறு நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்களில் விவசாயிகளின் நலன்களுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதமரின் தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 10 மாநிலங்களுக்கு ரூ.1200 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டிற்கான ஒப்புதல் கடிதங்களை அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் அமைச்சர்களிடம் அவர் வழங்கினார்.

மத்திய அரசு கொள்கை முடிவுகளை வகுப்பதுடன் மாநிலங்களில் திட்டங்கள் காலதாமதமின்றி உடனடியாக செயல்படுத்த தேவையான உதவிகள் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டின் வேளாண் வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதமாக உயர்ந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். உணவு தானிய உற்பத்தியின் சராசரி ஆண்டு வளர்ச்சி இரண்டு மடங்கிற்கு மேலாக அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார். உணவு தானிய உற்பத்தி தற்போது ஆண்டு ஒன்றுக்கு 84 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். 2023-24-ம் ஆண்டு முதல் 2025-26-ம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகளில் ரபி பருவ உணவு தானிய உற்பத்தியில் 205 லட்சம் டன் என்ற முன்னெப்போதும் இல்லாத அளவில் உணவு உற்பத்தி பதிவாகியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய வளர்சிக்கு மாநில வேளாண் துறைகள், விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளின் கூட்டு முயற்சியே காரணம் என்று திரு சிவராஜ் சிங் சௌகான் பெருமிதம் தெரிவித்தார்.

Leave a Reply