குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், இன்று (27.09.2026) திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ உத்திராடம் திருநாள் மருத்துவ அறிவியல் அகாடமியின் 15-வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பட்டம் பெறும் மாணவர்களிடையே உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், கேரளத்தின் சுகாதாரம், மருத்துவக் கல்வித் துறையில் உத்திராடம் திருநாள் மருத்துவ அறிவியல் அகாடமியின் முக்கிய பங்களிப்பை எடுத்துரைத்தார். ஒரு மருத்துவக் கல்வி நிறுவனத்தின் உண்மையான பலம், அது வழங்கும் கல்வியின் தரம், அது உருவாக்கும் மருத்துவர்கள், அது மேற்கொள்ளும் ஆராய்ச்சி ஆகியவற்றில் அடங்கியுள்ளது என்று அவர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், டிஜிட்டல் சுகாதாரம், மேம்பட்ட வரைபட நுட்பம், துல்லிய மருத்துவம் ஆகியவை சுகாதாரத் துறையை மாற்றியமைத்து வருவதாக திரு சி பி ராதாகிருஷ்ணன் கூறினார். இருப்பினும், மருத்துவத்தின் மனிதப் பரிமாணத்தை தொழில்நுட்பம் ஒருபோதும் இடம்பெயரச் செய்யக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார். தொழில்நுட்பம் ஒரு மருத்துவருக்கு உதவ முடியும் எனவும் ஆனால் அது ஒரு மருத்துவரின் மனிதநேய அம்சங்களுக்கு ஈடு ஆகாது என்றும் அவர் கூறினார். ஒரு நோயாளியின் சிக்கல்களுக்கு, செவிசாய்த்து, புரிந்துகொண்டு, ஆறுதல்படுத்த மருத்துவர் தேவைப்படுகிறார் என்று அவர் கூறினார். அறிவியல் சிறப்பும் மனிதநேயமும் எப்போதும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கடந்த 12 ஆண்டுகளில் மருத்துவக் கல்வியில் ஏற்பட்டுள்ள விரிவாக்கத்தையும் திரு சி பி ராதாகிருஷ்ணன் எடுத்துரைத்தார்.
விழாவில் கேரள ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஸ்ரீ உத்திராடம் திருநாள் மருத்துவ அறிவியல் அகாடமியின் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
எஸ்.சதிஸ் சர்மா
