இந்தியா அமைதியை விரும்புகிறது எனவும் எந்தவொரு நாட்டின் நிலப்பரப்பையும் ஆக்கிரமிக்க முற்படுவதில்லை என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜநாத் சிங் கூறியுள்ளார். இருப்பினும், அமைதியை பலவீனமாகக் கருதக்கூடாது எனவும் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது, நாட்டைப் பாதுகாப்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்று, (2026 செப்டம்பர் 27) புதுதில்லியில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.
இந்தியாவிற்கு எதிராகப் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு நாட்டுடனும் பேச்சுவார்த்தை நடத்த இடமில்லை என்று அமைச்சர் உறுதிபட தெரவித்தார். ஒரு அண்டை நாடு பயங்கரவாதத்தை ஆதரிக்கும் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றும் வரை, அதற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இந்தியாவிற்கு முழு உரிமை உண்டு என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்களை திரு ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
பாதுகாப்புத் துறையில் தற்சார்பு அடைவதை நோக்கிய இந்தியாவின் முன்னேற்றத்தை திரு ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி, 2013-14-ம் ஆண்டில் வெறும் ரூ. 686 கோடியாக இருந்த நிலையில், 2025-26-ம் ஆண்டில் ரூ. 38,424 கோடி என்ற சாதனை அளவை எட்டி, 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சென்றடைந்துள்ளதை திரு ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார்.
திவாஹர்
