புதுதில்லியில் இன்று நடைபெற்ற தேர்தல் ஆணையத்தின் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள்.

தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியின் போது, வாக்காளரின் விடுபட்ட விவரங்கள், தர்க்கரீதியான முரண்பாடுகள் காரணமாக, எந்த நபருக்காவது அறிவிப்பு அனுப்பப்பட்டிருந்தால், அத்தகைய நபர்களின் வீடுகளுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரில் சென்று, உரிய ஆவணங்கள் பெறப்பட்டு, அவை வாக்காளர் பதிவு அலுவலரின் முடிவிற்காக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அத்தகைய நபர்களை விசாரணைக்காக வாக்காளர் பதிவு அலுவலர் / உதவி வாக்காளர் பதிவு அலுவலரின் அலுவலகத்திற்கு நேரில் வரவழைக்கத் தேவையில்லை. வாக்காளர் பதிவு அலுவலரால் தீர்மானிக்கப்படும் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே, முன்னுரிமை அடிப்படையில் இணையவழியில், விசாரணை நடத்தப்படும். தேவை ஏற்படும் பட்சத்தில், விசாரணையில் பங்கேற்க, வாக்காளர் தனது சார்பில், அவரது குடும்பத்தில் உள்ள எந்தவொரு வயதுவந்த உறுப்பினரையும் அங்கீகரிக்க முடியும். இணையவழி விசாரணைக்கான வசதிகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இரவு நேரத் தங்குமிடங்களில் வசிப்பவர்கள், தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் வீடற்றவர்களுக்காக, தேவைக்கேற்ப போதிய எண்ணிக்கையிலான உதவி மையங்களை அமைப்பது அல்லது சிறப்பு முகாம்களை நடத்துவது போன்ற நடவடிக்கைகளை மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் மேற்கொள்வார்கள்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கான படிவம் 6-ல் இணைக்கப்பட்டுள்ள உறுதிமொழி, உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படாத காலங்களில், விதிகளின்படி (வாக்காளர் பதிவு விதிகள் 1960) பொருந்தக்கூடிய படிவங்கள் பயன்படுத்தப்படும்.
களப்பணியாளர்கள் தங்களது சட்டப்பூர்வ அதிகாரங்களுக்கு ஏற்ப, தேர்தல் ஆணையத்தின் இணையதள அமைப்பை அணுகும் உரிமையைப் பெற்றுள்ளனர். மூத்த துணைத் தேர்தல் ஆணையர் தலைமையில், ஐஐடி / ஐஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த, நிபுணரை உள்ளடக்கிய குழு, இசிஐநெட் இணையதள அமைப்பின் செயல்பாடுகள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இயங்குவதை உறுதி செய்யும் வகையில், அதனை மறுஆய்வு செய்து ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கும். கடந்த சில மாதங்களில், மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், இணையதளத்தில் ஏற்கனவே பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. களப்பணியாளர்களுக்கு, மேலும் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால், அதற்கான வசதிகளும் நடைமுறைப்படுத்தப்படும். இனிவரும் காலங்களில், தகவல் தொழில்நுட்பத் தொகுதிகள், இணையதளங்கள் தொடர்பான அனைத்து புதிய முயற்சிகளும், ஆணையத்தின் ஒப்புதலைப் பெறுவதற்கு முன்னதாக, அதிகாரிகளின் குழுவில் விவாதிக்கப்படும்.
தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை ஆணையம் 2026 அக்டோபர் 30 வரை நீட்டித்துள்ளது. அறிவிப்புகள், கோரிக்கைகள்/ஆட்சேபனைகள் மீது தீர்வு காண்பதற்கான காலக்கெடு 2026 நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிர மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியின் கோரிக்கையின்படி, அம்மாநிலத்தில், கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 2026 அக்டோபர் 12 வரையிலும், அறிவிப்புகள், கோரிக்கைகள்/ஆட்சேபனைகள் மீது தீர்வு காண்பதற்கான காலக்கெடு 2026 நவம்பர் 10 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆணையத்தின் அனைத்துக் கூட்டங்களுக்கும், அதற்கான நிகழ்ச்சி நிரல் முன்கூட்டியே விநியோகிக்கப்படுவதுடன், கூட்டத்தின் நடவடிக்கைகள் குறித்த குறிப்புகள் வெளியிடப்படும்.
அனைத்து அதிகாரிகளின் வருடாந்திர செயல்திறன் குறித்த மதிப்பீட்டு அறிக்கைகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள், அதாவது, ஆண்டுதோறும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் நிறைவு செய்யப்படும்.
அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஆணையத்தின் ஒப்புதல் பெறப்படும்.
ஆணையத்தின் அதிகாரிகளுக்கு, உறுப்பினர்களால் வழங்கப்படும் அனைத்து அறிவுறுத்தல்களும், மிகத் துல்லியமாகப் பின்பற்றப்பட வேண்டும்.

  1. பீகார், மேற்குவங்கம் உட்பட 20 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. இந்தப் பணியின் போது அல்லது அதற்குப் பின்னர் பெயர் விடுபட்ட எந்தவொரு நபர், இளைஞர்கள் அல்லது முதல்முறை வாக்காளர்கள் உட்பட எவரும், தொடர் புதுப்பித்தல் செயல்முறையின் கீழ், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரைச் சேர்க்க சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம். இதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரிகள் ஆகியோர், விடுபட்ட வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
  2. மேலும், அமைச்சரவைச் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதம், ஆணையம் அல்லது தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்ந்த எந்தவொரு கொள்கை விவகாரம் சார்ந்தது அல்ல என்றும், மாறாக, இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பணிபுரியும் ஒரு அதிகாரி (பணிமாற்ற அடிப்படையில் வந்தவர்) தொடர்பான விவகாரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இரண்டு ஆணையர்களின் உத்தரவுகளுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரி பிறப்பித்த பணி மறுபகிர்வு உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுடன், தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மீதான துணைத் தேர்தல் ஆணையரின் மேற்பார்வையிடும் அதிகாரமும் ஒருபோதும் திரும்பப் பெறப்படவில்லை.
    கடந்த சில மாதங்களில், நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி உட்படப் பல முக்கிய முடிவுகளை ஆணையம் எடுத்துள்ளது. பீகார் மாநிலத்தில் தொடங்கி, மேற்கு வங்கம் உட்பட, பிற 30 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் என அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்காக 24.06.2025 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஆணையத்தின் ஒருமனதான ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, உச்ச நீதிமன்றத்தால் 27.05.2026 அன்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்கான கால அட்டவணை 27.10.2025 அன்றும், 19 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கான கால அட்டவணை 14.05.2026 அன்றும் ஆணையத்தின் ஒருமனதான ஒப்புதலுடன் வெளியிடப்பட்டன. மூன்றாம் கட்டமாக, எஞ்சியுள்ள 12 மாநிலங்களில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னரே, வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை குறித்த இறுதி விவரம் தெரியவரும்.
    விடுபட்ட வாக்காளர்களின் விண்ணப்பப் படிவங்களைப் பெறுவதற்காக, அவர்களது வீடுகளுக்கே நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளுமாறு கோவா மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதில், விடுபட்ட 97 வாக்காளர்களில், 81 பேர் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான ‘படிவம் 6’-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர்.
  3. 26 செப்டம்பர் 2026 அன்று பிற்பகல் 3 மணிக்கு புதுதில்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் திரு கியானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் எஸ் எஸ் சந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply