லடாக்கில் உயரமான 20 சிகரங்களை அடைந்து வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ள மலையேற்றக் குழுவிற்குப் பாதுகாப்பு அமைச்சர் பாராட்டு.

லடாக்கில் 6 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள இதுவரை எட்டப்படாத 20 சிகரங்களை 23 நாள்களில் அடைந்து, வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ள மலையேற்றக் குழுவிற்குப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.

லடாக் மலைப்பகுதியில் சாம்சர் – லுங்சர், கியாமா நாலா, சோகுலா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 20 உயரமான சிகரங்களை இந்தக் குழு வெற்றிகரமாக அடைந்துள்ளது. டிராங்கில் உள்ள தேசிய மலையேற்றம், சாகச விளையாட்டு நிறுவனத்தின் கர்னல் ரன்வீர் சிங் ஜம்வால் தலைமையில் 20 பேர் கொண்ட திறன் வாய்ந்த மலையேற்ற வீரர்கள் அடங்கிய குழு இந்தச் சாதனையைப் படைத்துள்ளது.

இந்த மலையேற்றக் குழுவினருடன் கலந்துரையாடிய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இத்தகைய வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ள வீரர்களின் துணிச்சலையும், மன உறுதியையும் பாராட்டினார். மலையேற்றம், சாகச விளையாட்டுகளில் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்து வருவதை இந்தச் சாதனை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மலையேற்ற வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இந்த சாதனை அமைந்துள்ளதாகவும், இது மலையேற்றத்தில் புதிய அளவுகோல்களை உருவாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் உள்ள இளம் மலையேற்ற வீரர்கள் சாகச செயல்களை மேற்கொள்வதற்கும் இது தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடுவதற்கும், நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதற்கும் உத்வேகம் அளிக்கும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

சிறப்பான திட்டமிடல், தொழில்நுட்ப நிபுணத்துவம், சகிப்புத்தன்மை, குழுப் பணி போன்ற பண்புகளை இந்தச் சாதனை வெளிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அதிக உயரம் கொண்ட சிகரங்களில் மலையேற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது நாட்டின் சாகச விளையாட்டுத் திறனை பிரதிபலிப்பதுடன், இளம் தலைமுறையினருக்குப் பெரிதும் ஊக்கமளிக்கும் என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

Leave a Reply