புதியக் கண்டுபிடிப்புகளுக்கான எழுச்சி, வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்ட உதவிடும்!-மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி.

நடைமுறை வாழ்வில் உள்ள சவால்களைக் கண்டறிந்து, அவைகளுக்கான தீர்வுகளைக் காண்பதற்கு ஏதுவாக சேவை மனப்பான்மையுடன் புதியக் கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியம் குறித்து மத்திய கல்வி அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சேவையே முதலில் புத்தாக்க சவால்கள் என்ற போட்டியை தொடங்கிவைத்து பேசிய அவர், இதனைத தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் இதற்கான இணையதளம், பதிவு செய்வதற்கான ஆன்லைன் தளத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில், இளைஞர்கள் அர்ப்பணிப்புணர்வுடன் பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சேவை என்பது செயல்பாட்டின் மூலம் வெளிப்பட வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர், சிக்கல்கள் குறித்த புரிதலுடன் அதற்கான தீர்வுகளைப் பயன்பாட்டிற்கு உகந்த வகையில் கண்டறிய வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார். அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் கொண்ட இந்தியாவில் இதற்கான சாதகமான சூழல் நிலவுவதை சுட்டிக்காட்டிய அவர், ஆர்வம், தன்னம்பிக்கை, தொழில்நுட்பங்களை எளிதாகக் கையாளும் திறன் இளைஞர்களிடம் உள்ளதாகக் கூறினார்.

இளைஞர்கள் தங்களது ஆர்வத்தைப் பயனுள்ள வகையில் மாற்றுவதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டிய பொறுப்பு அரசிடம் உள்ளதாக அவர் தெரிவித்தார். தேசிய கல்விக்கொள்கையின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்த அவர், சிந்தனை, படைப்பாற்றல், அனுபவ ரீதியிலான கற்றல் முறைகள், சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் திறன் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாணவர்கள், இளம் பருவத்திலேயே பரிசோதனைகளை மேற்கொள்வதிலும், புதியக் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தத் தேவையான வாய்ப்புகள் அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் 10,000-க்கும் அதிகமான அடல் சிந்தனை ஆய்வகங்கள், 17,300 நிறுவன ரீதியிலான புத்தாக்கக் குழுக்கள், நவீன இந்தியாவிற்கான ஹேக்கத்தான் போன்ற முன்முயற்சிகள் மூலம் வலுவான புத்தாக்க சூழல் அமைப்பை உறுதி செய்வதற்கான மத்திய அரசின் நடவடிக்கைகளை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply