2026 ஜூலை 10 முதல் 19 வரை உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெற்ற 58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் 2026 போட்டியில், இந்திய அணியின் நான்கு மாணவர்களும் தங்கப் பதக்கங்களை வென்றனர்.
பதக்கங்கள் வென்ற மாணவர்கள் விவரம்:
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த, தேபதத்தா பிரியதர்ஷி
பஞ்சாப் மாநிலம் மண்டி கோபிந்கரை சேர்ந்தவர் ஹர்ஷித் சிங்லா
தில்லியைச் சேர்ந்தவர் கபீர் சில்லர்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சந்தீப் குச்சி
நாடுகள் வாரியான பதக்கப் பட்டியலில், சீனா, வியட்நாம் மற்றும் தனிநபர் பங்கேற்பாளர்கள் குழு பி (ரஷ்யாவிலிருந்து) ஆகியவற்றுடன் இணைந்து இந்தியா முதலிடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டு சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டிகளில் 93 நாடுகளிலிருந்து 363 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த எண்ணிக்கை இதுவரை நடந்த சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டிகளிலேயே மிகப்பெரியதாகும். மேலும் முதல் முறையாக அனைத்துப் பதக்கங்களையும் இந்தியா வென்றுள்ளது!
சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா பங்கேற்பது 27-வது முறையாகும். இத்தனை ஆண்டுகளில், இந்திய மாணவர்களில் 32% பேர் தங்கப் பதக்கங்களையும், 51% பேர் வெள்ளிப் பதக்கங்களையும், 17% பேர் வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளனர். கடந்த பத்து பங்கேற்புகளில், தங்கம், வெள்ளிப் பதக்கங்களின் சதவிகிதம் முறையே 43%, 53% ஆக இருந்துள்ளது.
சர்வதேச அரங்கில் இந்தியத் திறமைகளை வெளிப்படுத்த தொடர்ந்து வலுவான ஆதரவை வழங்கி வரும் தேசிய அறிவியல் ஒலிம்பியாட் வழிகாட்டுதல் குழு, ஆசிரியர் அமைப்புகள், மத்திய அரசின் நிதி வழங்கும் முகமைகள் (கல்வித் துறை, அறிவியல், தொழில்நுட்பத் துறை மற்றும் கல்வி அமைச்சகம்) ஆகியவை நன்றிக்குரியவை.
எம்.பிரபாகரன்
