வாழைத் தோட்டங்கள் முதல் மக்கானா சந்தைகள் வரை: பீகாரின் வேளாண் மையப்பகுதிக்கு வலுவூட்டத் தயாராகும் நெடுஞ்சாலை.

பீகாரின் வளமான சமவெளிகளில் விடியல் தோன்றுவதற்கு முன்பே, ககாரியா பண்ணைகளிலிருந்து வாழைப்பழத் தார்கள் ஏற்றப்பட்ட லாரிகள் புறப்படுகின்றன. அதே நேரத்தில், நாட்டின் மிகப்பெரிய மக்கானா (தாமரை விதைகள்) மையங்களில் ஒன்றான பூர்னியாவின் குளங்கள் மற்றும் பதப்படுத்தும் மையங்களிலிருந்து மக்கானா மூட்டைகள் தங்கள் பயணத்தைத் தொடங்குகின்றன. பல ஆண்டுகளாக, போக்குவரத்து நெரிசலும் பருவகால இடையூறுகளும் அதிக விலைமதிப்புள்ள இந்தப் பயிர்களின் பயணத்தை அடிக்கடி மெதுவாக்கி வருகின்றன. வாழைப்பழம் போன்ற எளிதில் அழுகும் ஒரு பயிருக்கு, ஒவ்வொரு மணி நேரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் நிலையில், வேகமான, நம்பகமான இணைப்பு வசதிகள், வீணாவதைக் குறைக்கவும், தரத்தைப் பாதுகாக்கவும், விவசாயிகளுக்கான சந்தை வருவாயை அதிகரிக்கவும் உதவும். தேசிய நெடுஞ்சாலை-31, தேசிய நெடுஞ்சாலை-231 ஆகியவற்றின் ககாரியா-பூர்னியா பகுதியை நான்கு வழிச்சாலையாகத் தரம் உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்ட திட்டத்திற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம், நீண்டகாலமாக உள்ள சவால்களுக்குத் தீர்வு காணும் நோக்கில் அமைந்துள்ளது.

பீகாரில், தேசிய நெடுஞ்சாலை 31 மற்றும் 231-ன் ககாரியா-பூர்னியா பகுதியை ரூ.3936.05 கோடி செலவில் 4-வழிச்சாலையாகத் தரம் உயர்த்துவது , பீகாரின் வாழைப்பழங்களையும் மக்கானாவையும் திறமையாகச் சந்தைக்குக் கொண்டு சேர்ப்பதைத் தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களுக்கான முதலீடாகும். இது, மாநிலத்தின் விவசாய மையப்பகுதியின் பொருளாதார முதுகெலும்பை வலுப்படுத்தவும் உதவுகிறது.

மேம்படுத்தப்பட்ட இந்த வழித்தடம், பீகாரின் பல முக்கியப் பொருளாதார, சமூக மற்றும் தளவாட மையங்களுக்கான இணைப்பை வலுப்படுத்தும். ஒரு ஜவுளித் தொகுப்பு, இரண்டு பிரம்மாண்ட உணவுப் பூங்காக்கள், இரண்டு மீன்பிடி மற்றும் கடல் உணவுப் பூங்காக்கள் உள்ளிட்ட பிரதமரின் ஐந்து விரைவு சக்தி பொருளாதார மையங்களையும், நான்கு முக்கிய ரயில் நிலையங்கள், ஒரு விமான நிலையம், நான்கு தேசிய நெடுஞ்சாலைகள், இரண்டு மாநில நெடுஞ்சாலைகளை உள்ளடக்கிய 11 தளவாட மையங்களையும் இணைப்பதன் மூலம், இந்தத் திட்டம் இந்தப் பிராந்தியம் முழுவதும் பல்முனைப் போக்குவரத்து ஒருங்கிணைப்பைக் கணிசமாக மேம்படுத்தும்.

Leave a Reply