திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் 61-வது நிறுவன தினம் இன்று (மே, 3, 2024) கொண்டாடப்பட்டது.

திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் 61-வது நிறுவன தினம் இன்று (மே, 3, 2024) கொண்டாடப்பட்டது. திருப்பதியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் கே.என். சத்யநாராயணா முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, திருச்சி என்ஐடி இயக்குநர் (பொறுப்பு) முனைவர் என். குமரேசன் தலைமை வகித்தார். முக்கியப் பிரமுகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும்  உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பேராசிரியர் கே. என். சத்யநாராயணா தனது உரையின் போது, தற்போதைய சூழ்நிலையில் கடுமையான போட்டி இருந்த போதும் வேலை வாய்ப்பு விகிதங்களை தொடர்ந்து தக்கவைத்து கொண்டதற்காக திருச்சி என்ஐடிக்கு பாராட்டு தெரிவித்தார். நிலையான வளர்ச்சிக்கும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் புதுமையான கண்டுபிடிப்புகள் மிக அவசியம் என்பதையும் வலுவான ஆராய்ச்சி சூழலை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பல பணிகளில் மனிதர்களுக்கு பதிலாக இருக்கும் சூழலில், கல்வியாளர்களின் புதுமையான கண்டுபிடிப்புகளின் மூலமே புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதை அவர் எடுத்துரைத்தார்.

மாணவர்கள் தங்களது மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கும் பொழுது செயற்கை நுண்ணறிவு மட்டுமின்றி மற்ற பொறியியல் துறைகளிலும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.

இந்தியாவில் உள்ள 31 என்ஐடி -களில் என்ஐடி திருச்சிராப்பள்ளி முதல் இடத்தையும், அனைத்துப் பொறியியல் நிறுவனங்களில் ஒன்பதாவது இடத்தையும் பெற்றிருப்பதை இயக்குநர் முனைவர் ஜி.அகிலா பெருமையுடன் சுட்டிக்காட்டினார். இந்நிறுவனம் செய்துள்ள சாதனைகளின் முக்கியத்துவத்தை, கல்வி நிறுவனங்களுக்கான உலகத் தரவரிசை  மற்றும் தேசியத் தரவரிசைக் கட்டமைப்பு பட்டியலின் மூலம் அறியலாம் என்றும் அவர் கூறினார். நமது நாட்டிலுள்ள முக்கியமான ஆறு நதிகளை நிர்வகிக்கும் பொறுப்பை அமல்படுத்திய ஜல் சக்தி அமைச்சகம் 12 தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும், தமிழ் நாட்டிலுள்ள காவிரிப் படுகைக்கான ஆராய்ச்சி, மதிப்பீடு மற்றும் மேலாண்மைத் திட்டத்தை உருவாக்கும் பொறுப்பு என்ஐடி திருச்சிராப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளதையும் அவர் எடுத்துரைத்தார். மேலும், என்ஐடி திருச்சிராப்பள்ளியில் “திறன் பயிற்சி மையத்தை  கல்வி அமைச்சகம் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்  நிறுவியுள்ளது. இந்த மையத்தின் மூலம் 200 க்கும் அதிகமான மாணவர்களுக்கு, இளைய தலைமுறை மென்பொருள் மேம்பாட்டாளர், அலுவலக உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, திருச்சிராப்பள்ளி என்ஐடியில் மாணவர்களை மேம்படுத்தவும், தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், வேலை தேடுபவர்களை விட வேலைகளை உருவாக்குபவர்களை வளர்க்கவும் “புதிய கண்டுபிடிப்பு மையம்” நிறுவப்படும் என்று அவர் அறிவித்தார். இயக்குநர் முனைவர் ஜி.அகிலாவின் உரையை முனைவர் என். குமரேசன்  வாசித்தார்.

முனைவர் எஸ். டி. ரமேஷ், டீன் (கல்வி), நடப்பு கல்வியாண்டில் என்ஐடி திருச்சிராப்பள்ளியின் குறிப்பிடத்தக்க சாதனைகளைக் கோடிட்டுக் காட்டும் விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார். சிறப்பாகச் செயல்பட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களுக்கு சாதனை விருதுகள் மற்றும், சிறப்பாகச் செயல்பட்ட துறைக்கு சாதனை விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அது மட்டுமின்றி, 2024 ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த சிறந்த மாணவியாக செல்வி. எஸ். ஹர்ஷிதா, ஆர்.இ.சி. / என்ஐடி இன் முன்னாள் மாணவர்கள் சங்கத்தால் கௌரவிக்கப்பட்டு, நிதியுதவியும் வழங்கப்பட்டது.

எம்.பிரபாகரன்

Leave a Reply