இந்தியா-நைஜீரியா கூட்டு வர்த்தகக் குழுவின் 2-வது அமர்வு அபுஜாவில் நடைபெற்றது.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் திரு அமர்தீப் சிங் பாட்டியா தலைமையிலான ஏழு பேர் கொண்ட இந்திய தூதுக்குழுவுடன், நைஜீரியா கூட்டாட்சி குடியரசுக்கான இந்திய ஹை கமிஷனர் திரு ஜி பாலசுப்பிரமணியன், வர்த்தகத் துறையின் பொருளாதார ஆலோசகர் திருமதி பிரியா பி.நாயர் ஆகியோர் 29.04.2024 முதல் 30.04.2024 வரை அபுஜாவில் தங்கள் நைஜீரிய சகாக்களுடன் கூட்டு வர்த்தகக் குழு கூட்டத்தை நடத்தினர். நைஜீரியாவின் மத்திய தொழில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சகத்தின் நிரந்தர செயலாளர், தூதர் நூரா அபா ரிமி, வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் ஆகியோர் கூட்டத்திற்கு இணைந்து தலைமை தாங்கினர்.

இந்தப் பேச்சுவார்த்தையில், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் விரிவாக்கத்திற்கான பரந்த பயன்படுத்தப்படாத வாய்ப்புகள் குறித்தும் இரு தரப்பினரும் விரிவான ஆய்வு மேற்கொண்டனர். இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி, இந்திய தேசிய பரிவர்த்தனைக் கழகம் (என்பிசிஐ) ஆகியவற்றின் அதிகாரிகளும் இந்தியாவின் அதிகாரபூர்வ குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியில், இருதரப்பு வர்த்தகத்திற்கு தடையாக உள்ள அனைத்து பிரச்சினைகளையும் விரைவாக தீர்க்கவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மேம்பாட்டை எளிதாக்கவும் இரு தரப்பினரும் உறுதியளித்தனர். மின்சாரம், நிதி தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, மின்சார இயந்திரங்கள், மருந்துகள் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய அதிகாரபூர்வ தூதுக்குழுவுடன் சிஐஐ தலைமையிலான வர்த்தக தூதுக்குழுவும் சென்றது. இந்தியா-நைஜீரியா கூட்டு வர்த்தகக் கூட்டமைப்பின் 2-வது அமர்வின் விவாதங்கள் சுமூகமாகவும், தொலைநோக்குப் பார்வையுடனும் அமைந்திருந்தன.

ஆப்பிரிக்க பிராந்தியத்தில் இந்தியாவின் 2-வது பெரிய வர்த்தக கூட்டாளியாக நைஜீரியா உள்ளது. இந்தியாவுக்கும் நைஜீரியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2022-23 ஆம் ஆண்டில் 11.8 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2023-24 ஆம் ஆண்டில், இருதரப்பு வர்த்தகம் 7.89 பில்லியனாகி குறைந்து வரும் போக்கைக் காட்டுகிறது. 27 பில்லியன் அமெரிக்க டாலர் மொத்த முதலீட்டுடன், சுமார் 135 இந்திய நிறுவனங்கள் நைஜீரியாவின் துடிப்பான சந்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த முதலீடுகள் உள்கட்டமைப்பு, உற்பத்தி, நுகர்வோர் பொருட்கள், சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ளன.

எம்.பிரபாகரன்

Leave a Reply