மூன்று ஆண்டுகளில் தொழில்நுட்ப ஜவுளி ஏற்றுமதியை 2 மில்லியன் டாலரிலிருந்து 10 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு 5 மடங்காக இலக்கை அதிகரிக்க நேரம் வந்துவிட்டது!- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

மூன்று ஆண்டுகளில் தொழில்நுட்பம் சார்ந்த ஜவுளி ஏற்றுமதியை 2 மில்லியன் டாலரிலிருந்து 10 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு 5 மடங்காக இலக்கை அதிகரிப்பதற்கான தருணம் வந்துவிட்டதாக மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில் நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். தில்லியில் இன்று இந்திய தொழில்நுட்ப ஜவுளி சங்க பிரதிநிதிகளிடையே உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார். தொழில்நுட்ப உற்பத்தி கட்டமைப்புக்காக குறைந்த விலையில் நிலம் மற்றும் மின்சாரம் வழங்கி ஆதரவளிக்கும் மாநிலங்களில் திறன் சார்ந்த ஊக்குவிப்பை மத்திய அரசு வழங்கும் என்று அமைச்சர் கூறினார்.

ஜவுளி உற்பத்தியில் சிறந்த தரத்தை பின்பற்ற வேண்டும் என்று கூறிய அமைச்சர் சர்வதேச மற்றும் உள்நாட்டு நுகர்வோர் விஷயத்தில் மாறுபட்ட தரம் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். தொழில்நுட்ப ஜவுளித்துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அரசின் நிதியைப் பயன்படுத்தி பொதுத்துறை மற்றும் தனியார் பங்கேற்பை மேற்கொள்ளலாம் என அவர் ஆலோசனை வழங்கினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி உத்வேகம் அடைந்துள்ளது. தற்போது அது ஆண்டுக்கு ஐந்து சதவீத விகிதத்தில் வளர்ந்து வருகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த வளர்ச்சியை 15 முதல் 20 சதவீதம் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

250 மில்லியன் டாலர் என்ற நடப்பு உலகச் சந்தையில் இந்தியாவின் பங்கு 19 மில்லியன் டாலராக உள்ளது. சந்தையில் எட்டு சதவீத பங்கை அதாவது நாற்பது பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவை எட்ட இந்தியா ஆர்வம் கொண்டுள்ளது.

இந்த நோக்கங்களை மனதில் கொண்டு மத்திய அரசு தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தை 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியுள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாகவும் உலகில் ஏற்றுமதி சார்ந்த நாடாகவும் உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்ப ஜவுளித்துறையை மேம்படுத்த அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து விளக்கிய அமைச்சர், வேளாண்மை / தோட்டக்கலை, நெடுஞ்சாலைகள், ரயில்வே, மீன்வளம் உள்ளிட்ட அரசு அமைப்புகள் பயன்படுத்துவதற்கு 92 பொருட்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன என்றார். இது தொடர்பாக 9 அமைச்சகங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன என்று அவர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply