ஏற்காடு மலைப்பாதையில் தரமில்லாமல் கட்டப்பட்டு வரும் தடுப்புச்சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது! – கண்டுகொள்ளுமா தமிழக அரசு? 

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பிரதான இடம் வகிக்கிறது. சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு கொண்டப்ப நாயக்கன்பட்டி மற்றும் குப்பனூர் ஆகிய இரு வழிகளில் செல்லலாம். இதில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் பாதையாகவும், சேலம் நகரத்தில் இருந்து குறைந்த பயண தூரம் (30 கிலோ மீட்டர்) கொண்ட பாதையாகவும் கொண்டப்பநாயக்கன்பட்டி வழி மலைப்பாதை உள்ளது.

இந்த மலைப்பாதையானது கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி இரவு ஏற்பட்ட பெரும் மழையால் பாதிக்கப்பட்டது. மலைப்பாதையின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட மண்சரிவுகளை தற்காலிகமாக சரிசெய்ய ஒரு வாரம் காலம் ஆனது. அதுவரை ஏற்காடு மக்கள் மின்சாரம், உணவு, காய்கறி மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி இருந்தனர்.

இந்நிலையில், மண் சரிவு ஏற்பட்டு 1 ஆண்டுக்கு மேலாகியும் இதன் கட்டுமான பணிகள் துவங்கப்படாமல் கடந்த 2017ஆம் ஆண்டு  கட்டுமான பணி துவங்கப்பட்டு ஒரு வருட காலத்திற்கு மேலாக நடைப்பெற்று வருகிறது. ஆனால் தற்போது நடைபெற்று வரும் இந்த கட்டுமான பணி தரமில்லாமல் நடைபெறுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

மலைப்பாதையின் 3 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகில் மண் சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்புசுவர், பணிகள் நிறைவடைவதற்கு முன்னரே பெரிய அளவிலான விரிசல் ஏற்பட்டு சற்று சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் சாலையை ஒட்டி விரிசல் ஏற்பட்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இருந்த போதிலும் இதை நெடுஞ்சாலை துறையினர் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு 12 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகில் கார் ஒன்று மோதி சாலையோர தடுப்பு சுவர் இடிந்ததை சரிசெய்யாமல் விட்டிருந்தனர். அப்போது ஏற்காட்டில் பெய்த பெருமழை காரணமாக மழை நீரானது அந்த உடைந்த தடுப்பு சுவர் வழியே பெரும் ஊற்று போல் ஓடியதால் மலை்பபாதையின் பெரும் பகுதிகள் மிகவும் பாதிப்புக்குள்ளானது. தற்போது இந்த விரிசல் ஏற்பட்டுள்ள தடுப்பு சுவர் சரி செய்யப்படாமல் விட்டால், மீண்டும் பெரும் மழை பெய்யும் பொழுது 2015 ஆண்டு ஏற்பட்ட மண் சரிவு போலவே பெரிய அளவிலான மண் சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, அரசு அதிகாரிகள் ஏற்காடு மலைப்பாதையில் கட்டப்பட்டு வரும் இந்த தடுப்பு சுவர் பணிகள் நல்ல தரமான முறையில் கட்டப்படுகிறதா? என்பது குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொண்டு, ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட இருக்கும் மிகப்பெரிய பேரழிவினை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அங்கு வசிக்கும் மக்களின் எதிர்பார்ப்பாகும். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்களா அரசு அதிகாரிகள்..?

-நவீன் குமார்.

Leave a Reply