பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு–கர்நாடக மாநிலங்களுக்கு இடையே ஓடும் பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணைகள் அல்லது தண்ணீரை திருப்பி அனுப்பும் கட்டமைப்புகளை கட்ட வேண்டாம் என்று கர்நாடக அரசை அறிவுறுத்த வேண்டும் என்று தங்களுக்கு நான் கடந்த ஆண்டு மே மாதம் 19–ந்தேதி எழுதிய கடிதத்தின் தொடர்ச்சியாக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.விவசாய பாசனத்திற்கு லக்கூர் அணைக்கு ஒரு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதற்காக கர்நாடக அரசு தனது எல்லையில் உள்ள முகலூர் என்ற இடத்தில் தண்ணீரை திருப்பி அனுப்பும் கட்டமைப்பை கட்டி இருப்பதாக ஊடகங்களில் விரிவாக செய்திகள் வெளியாகியுள்ளன. கர்நாடக அரசின் இந்த செயலால் பெண்ணாற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறைந்து, பெண்ணையாற்றை நம்பி இருக்கும் தமிழக பாசனப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும்.
இந்தச் சூழ்நிலையில் இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, பெண்ணையாற்றின் குறுக்கே எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்றும், தமிழக அரசின் முன்அனுமதி இல்லாமல் பெண்ணையாற்றில் எந்தவொரு திட்டப்பணிகளையும் செய்யக்கூடாது என்றும் கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.