தூத்துக்குடியில் இயங்கி வரும் நாசகார ஸ்டெர்லைட் நச்சாலையை எதிர்த்து 1996 ஆம் ஆண்டிலிருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் போராடி வருகிறார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து, அதன் விளைவாக 2010 செப்டம்பர் 28 ஆம் நாள், நீதியரசர் பால்வசந்தகுமார் அமர்வு ஆலையை நிரந்தரமாக மூடும் தீர்ப்பை வழங்கியது.
ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமம், உச்சநீதிமன்றத்தில் அதற்கு தடை ஆணை வாங்கியபோது, வைகோ அவர்கள், வழக்கறிஞர் தேவதாஸ் அவர்களின் துணையுடன் உச்சநீதிமன்றத்தில் பல அமர்வுகளில் பங்கேற்று வாதாடினார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதியரசர் பட்நாயக், நீதியரசர் கோகலே அமர்வு ஸ்டெர்லைட் ஆலையை இயக்கலாம் என்று ஆலைக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
அதன்பின்னர் வைகோ பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்ததோடு, உச்சநீதிமன்றத்திலும் புதிய ரிட் மனு தாக்கல் செய்தார்.
நீதியரசர் ஹாரிங்டன் நாரிமன் அமர்வு, வைகோவின் வாதத்தை ஏற்று வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கட்டும் என்று தீர்ப்பளித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் சிவஞானம், நீதியரசி பவானி சுப்புராயன் அமர்வில், வைகோ மூன்று மணி நேரம் தன் வாதங்களை முன் வைத்தார்.
அந்த அமர்வில் 2020 ஆகஸ்ட் 18 அன்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தீர்ப்பளித்தனர்.
வைகோவின் 24 ஆண்டு கால சட்டப் போராட்டம் வெற்றி பெற்றது.
ஆனால், அதே வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள இயந்திரங்களை அங்கிருந்து அகற்றாமல், பசுமை தாமிரம் என்ற பெயரில் அதே தொழிற்சாலையை அமைக்க முயற்சித்து வருகிற நிலையில், இன்றைய தமிழக அரசு அதற்கு வாய்ப்பளிக்காமல், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியும் கொடுக்காமல், வேதாந்த குழும தலைமையை சந்திப்பதற்கும் வாய்ப்பு தராமல், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் உணர்வோடு செயல்பட்டு வருவதால் வேதாந்தா குழுமம் புதிதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த ரிட் மனுவில் தன்னையும் ஒரு பிரதிவாதியாக விசாரிக்க வேண்டும் என்று வைகோ உள்ளீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு இன்று 16.10.2026 சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி நீதியரசர் தர்மாதிகாரி, நீதியரசர் அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வைகோ அவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 227 ஆவது நினைவு நாளான இன்று அக்டோபர் 16 ஆம் தேதி கயத்தாறுக்குச் சென்றுவிட்டதால், இன்றைய வழக்கு விசாரணையில் காணொளி காட்சி மூலம் தன்னுடைய உள்ளீட்டு மனுவையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். நீதியரசர்கள் அதனை ஏற்றுக் கொண்டு, வருகிற நவம்பர் 23 ஆம் தேதி அன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளனர்.
ஸ்டெர்லைட் நச்சாலை புதிய வடிவத்தில் நுழைய முயல்வதை எதிர்த்து மூன்று மாதங்களுக்கு முன்பு சுற்றுச் சூழல் காவலர்கள் ஹென்றி திபேன், பேராசிரியை பாத்திமா அம்மையார் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினருடன் இணைந்து தூத்துக்குடியில் வைகோ மிகப் பெரும் பொதுக் கூட்டத்தை நடத்தினார்.
ஸ்டெர்லைட் நச்சாலையை எதிர்த்து 30 ஆண்டுகளாக போராடி வரும் வைகோ, தொடர்ந்து நீதிமன்றத்தில் வாதங்களை வைத்துப் போராட சித்தமாக இருக்கிறார்.
இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்
