பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்வதில் ஒருங்கிணைந்த கொள்கைகளை வகுத்தல், சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை முக்கியம்!- குடியரசு துணைத்தலைவர்.

புதுதில்லியில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் 66-வது பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களிடையே குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் உரையாற்றினார். “இந்தியாவின் அடிப்படை மாண்புகள், தேசிய நலன்கள், தேசிய நோக்கங்கள்” என்ற கருப்பொருளில் அவர் உரையாற்றினார்.

இந்திய ஆயுதப்படையினர், குடிமைப்பணிகள், காவல்துறை, இதர அரசு அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள், நட்பு நாடுகளைச் சேர்ந்த 41 அதிகாரிகள் உட்பட மொத்தம் 122 பங்கேற்பாளர்களிடையே உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், தற்போதைய பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்வதில் உத்திப்பூர்வ சிந்தனை, ஒருங்கிணைந்த கொள்கைகளை வகுத்தல், சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

தேசிய மாண்புகள், தேசிய அடையாளத்தின் அடிப்படையாகவும், உலக நாடுகளுடன் நாட்டின் ஈடுபாடுகளை வழிநடத்துவதாகவும் கூறிய திரு சி பி ராதாகிருஷ்ணன், வசுதைவ குடும்பகம் என்ற இந்தியாவின் நாகரீக தத்துவத்தை சுட்டிக்காட்டினார். கொவிட் – 19 பெருந்தொற்று காலத்தின்போது இந்தியாவின் தடுப்பூசி மைத்ரி முன்முயற்சி, பேரிடரின்போது முதலில் களமிறங்கி பங்களிப்பது, பருவநிலை நடவடிக்கை, பேரிடர் மீட்புத் திறன் தொடர்புடைய சர்வதேச முன்முயற்சிகளில் நாட்டின் தலைமைத்துவம் குறித்து குறிப்பிட்டார்.

இறையாண்மை, ஜனநாயகம், மதச்சார்பின்மை, நீதி, சுதந்திரம், சமத்துவம், நல்லிணக்கம், நாட்டின் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு ஆகிய அரசியலமைப்பு மாண்புகளிலிருந்து நாட்டின் நலன்கள் உருவாகின்றன என்று குடியரசு துணைத்தலைவர் தெரிவித்தார்.

இந்தியாவின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தல், ஜனநாயக, மதச்சார்பற்ற, கூட்டாட்சியைப் பாதுகாத்தல், உத்திசார்ந்த அரசியல், பொருளாதார, ராணுவ நோக்கங்களை மேம்படுத்துதல், வளர்ச்சி, மனித மேம்பாட்டிற்கான நிலையான, பாதுகாப்பான சூழலை உறுதி செய்தல், சர்வதேச அமைதி, ஸ்திரத்தன்மைக்குப் பங்களித்தல் ஆகிய ஐந்து முன்னுரிமைகளை அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply