தில்லி உரையாடல்: எதிர்காலத்திற்குத் தயாரான இந்தியாவின் கொள்கைகள்” என்ற தலைப்பில் புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் பியூஷ்கோயல் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், சர்வதேச அளவில் வர்த்தக மையமாக இந்தியாவை மாற்றுவதன் மூலம் வேலைவாய்ப்பு, இளைஞர்கள் புத்தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என தெரிவித்தார். தாராளமய வர்த்தக கொள்கையானது இந்திய வர்த்தகத்தை மேம்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஜவுளி, காலணி, வேளாண்மை, உணவுத்துறையில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இந்திய பொருளாதார வளர்ச்சி, ஏற்றுமதி குறித்து பேசிய அமைச்சர் திரு பியூஷ் கோயல், ட்ரில்லியன் டாலர் ஏற்றுமதியை இலக்காக கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டார்களின் பங்களிப்புடன் சரக்குகள் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், செமிக் கண்டக்டர் உற்பத்தித் தொழிற்சாலைகளில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாக சுற்றுலாத்துறை உள்ளதாகவும், இந்தத் துறையை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு முக்கியப்பங்கு வகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இந்திய பணியாளர்களுக்கு நல்லதொரு வரவேற்பு இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் திரு பியூஷ் கோயல், இந்தியப் பணியாளர்களின் நேர்மை, அர்ப்பணிப்பு போன்றவை வெளிநாட்டினரை வெகுவாகக் கவர்ந்துள்ளதாகவும் கூறினார்.
சர்வதேச அளவில் கார் உற்பத்தி மையமாக இந்தியா திகழ்வதாக குறிப்பிட்ட அவர், வெளிநாடுகளைச் சேர்ந்த கார் உற்பத்தியாளர்கள் இந்தியாவில் அதிகளவில் தொழிற்சாலைகளை தொடங்க முன்வருவதாகவும் தெரிவித்தார். சர்வதேச அளவில் போட்டித்திறனை வலுப்படுத்த, கொள்கை வகுப்பாளர்கள், இந்திய தரக்கட்டுப்பாடு அமைப்பு உள்ளிட்டோர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டார்.
எம்.பிரபாகரன்
