இந்திய ராணுவ வீரர்களுக்கு தரமான உணவுப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கைகளை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், தரமான அரிசியைக் கொள்முதல் செய்யும் பொருட்டு, பாதுகாப்புத் துறை, இந்திய உணவுக் கழகம் ஆகியவை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு, பொதுவிநியோகத்துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம், லடாக், வடக்கிழக்கில் உள்ள ராணுவ விநியோக மையங்களுக்கு இந்திய உணவு பாதுகாப்புக் கழகம் தரமான அரிசியை விநியோகம் செய்ய உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், விவசாயிகள் வயல்வெளியில் அரும்பாடுபட்டு விளைவித்த தரமான அரிசியானது, இனி ராணுவ வீரர்களின் தட்டுகளில் தரமான உணவாக மாறும் என குறிப்பிட்டார். ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உயர்தரத்திலான அரிசி, பாக்கெட்டில் அடைத்து வழங்கப்படும் என்றும், இது தொலைதூர மற்றும் கடினமான நிலப்பரப்புகளுக்கு செல்லும் ராணுவ வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
ராணுவ உபகரணங்களை கையாளவும், சவால்களை எதிர்கொள்ளவும் ராணுவ வீரர்களுக்கு உடல்நலம், மனநலம் நன்றாக இருப்பது அவசியம் என்றும் குறிப்பிட்ட மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், அதற்கு ஆரோக்கிமான உணவு முக்கியம் என்றும் தெரிவித்தார். இந்திய விநியோகக் கிடங்குகள் இனிமேல் இந்திய ராணுவ விநியோக நடவடிக்கைகளில் முக்கிய இடம்பெறும் என்றும் கூறினார்.
ராணுவ வீரர்களுக்கு தரமான அரிசி வழங்கும் வகையில், கூடுதல் கிடங்குகள் அமைப்பது, விநியோகத்தை விரைவுபடுத்துவது, அரிசியை சேமிப்பதற்கான உபகரணங்களை வாங்குவது, அரிசி சேமிப்புக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய பாதுகாப்புத்துறை திட்டமிட்டுள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா
