கொங்கன் பயிற்சிக்காக ஐஎன்எஸ் திரிசூல் கப்பல் இங்கிலாந்து சென்றடைந்தது.

இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் திரிசூல், இங்கிலாந்தின் பிளைமவுத் துறைமுகத்திற்குச் சென்றடைந்தது. இக்கப்பல், இங்கிலாந்து கடற்படையுடன் இணைந்து கொங்கன்-26 பயிற்சியில் பங்கேற்க உள்ளது.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான வருடாந்திர இருதரப்பு கடல்சார் பயிற்சியான கொங்கன், இரு நாடுகளிடையேயான நீடித்த கடல்சார் ஒத்துழைப்புக்குச் சான்றாக விளங்குகிறது. கடந்த இருபது ஆண்டுகளில், இந்தப் பயிற்சியானது அளவிலும், தன்மையிலும் கணிசமாக வளர்ந்து, இரு கடற்படைகளுக்கும் இடையேயான கடல்சார் நடவடிக்கைகளில் மேம்பட்ட ஒருங்கிணைப்பையும் பரஸ்பர புரிதலையும் வளர்த்துள்ளது. கொங்கன் பயிற்சியானது, தொடங்கப்பட்டதிலிருந்து ஒத்துழைப்பின் ஒரு முக்கிய தூணாக உருவெடுத்து, கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதில் இரு கடற்படைகளின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

இந்த ஆண்டு இந்தப் பயிற்சி, இங்கிலாந்தின் பிளைமவுத் துறைமுக பகுதியில், 2026 அக்டோபர் 08 முதல் 15 வரை இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. துறைமுகக் கட்டத்தில், பல்வேறு வகையான தொழில்முறை கலந்துரையாடல்கள், விளையாட்டுப் போட்டிகள், கலாச்சார நிகழ்வுகள் ஆகியவை அடங்கும்.

கடல் கட்டமானது, வான், தரை, நீருக்கடியில் ஆகிய மூன்று களங்களிலும் சிக்கலான கடல்சார் செயல்பாட்டுப் பயிற்சிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

Leave a Reply