இந்தியாவின் விண்வெளித் துறையைத் தனியார் நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டிருப்பது, நாட்டிலேயே இளம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திறமையாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதுடன், வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளை நாட வேண்டிய தேவையையும் குறைக்க உதவியுள்ளது என்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறைகளின் (தனிப் பொறுப்பு) மத்திய இணை அமைச்சரும், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறைகளின் இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத் தலைவராகப் பொறுப்பேற்று 25 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், அவரது வாழ்க்கை, தலைமைத்துவம் மற்றும் பொதுச் சேவையின் பல்வேறு அம்சங்கள் குறித்து வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் மூலம், வாரணாசியில் உள்ள ருத்ராக்ஷ் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தில் அக்டோபர் 7-8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் ‘நமோ புத்தகத் திருவிழா’வில் டாக்டர் ஜிதேந்திர சிங் மாணவர்களிடையே உரையாற்றினார். இத்திருவிழாவை மூத்த பத்திரிகையாளர் அசோக் ஸ்ரீவஸ்தவா ஒருங்கிணைத்தார்.
பின்னர், மாணவர்களுடன் கேள்வி-பதில் அமர்வில் கலந்துரையாடிய டாக்டர் ஜிதேந்திர சிங், முன்பு உள்நாட்டு விண்வெளிச் சூழலில் வாய்ப்புகள் குறைவாக இருந்ததால் பல இளம் தொழில் வல்லுநர்கள் வெளிநாடுகளை நாடினர் என்றும், ஆனால் இத்துறை தாராளமயமாக்கப்பட்டுள்ளதால், அதிக திறமையாளர்கள் இங்கேயே தங்கி இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளிச் சூழலுக்குப் பங்களிக்க முடிகிறது என்றும் கூறினார். ஸ்கைரூட் உள்ளிட்ட தனியார் விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எழுச்சி, நாட்டிலேயே இளம் பொறியாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.
அமைச்சரின் தொடக்க உரையைத் தொடர்ந்து, மாணவர்களுடன் ஒரு மணி நேர கலந்துரையாடல் மற்றும் குழு விவாதம் நடைபெற்றது. இந்தக் குழுவில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சதுர்வேதி; கடல்சார் அறிவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் சுனில் குமார்; அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த டாக்டர் ஏக்தா; உயிரி தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த டாக்டர் கீதா; மற்றும் விண்வெளித் துறையைச் சேர்ந்த டாக்டர் ஜெய் ஜெயஸ்வால் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
திவாஹர்
